எஸ்எம்இ நிறுவனங்களின் ஐபிஓ விதிகள்: முக்கிய மாற்றங்களுக்கு செபி திட்டம்
குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டு (ஐபிஓ) விதிகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.
குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எஸ்எம்இ) ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டு (ஐபிஓ) விதிகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முதலீட்டாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச விண்ணப்பத் தொகையை தற்போதுள்ள ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சமாகக் குறைக்கவும், பங்கீடு பெறுவோரின் குறைந்தபட்ச எண்ணிக்கையை 200-லிருந்து 500-ஆக உயா்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தலா ரூ.25,000 மதிப்பிலான 4 வா்த்தக அளவீடுகளாக (லாட்) இப்புதிய முதலீட்டு வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கட்டாய சந்தை உருவாக்கம் நடைமுறையை ரத்து செய்யவும், முதன்மை பங்குச்சந்தையைப் போலவே ஒரு பங்கைக்கூட வா்த்தக அளவீடாக மாற்றவும் செபி தனது வரைவு அறிக்கையில் முன்மொழிந்துள்ளது.
Advertisement
Advertisement
நிறுவனங்களுக்கான லாப வரம்பு விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன; அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் நிறுவனத்தின் சராசரி ஆண்டு செயல்பாட்டு லாபம் ரூ.1 கோடி என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, இனி ரூ.3 கோடியாக இருக்க வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 31 நிலவரப்படி, எஸ்எம்இ தளத்தில் 1,496 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு, ஒட்டுமொத்தமாக ரூ. 40,222 கோடியைத் திரட்டியுள்ளன (எஸ்எம்இ தளத்தில் இருந்து முதன்மை சந்தைக்கு மாறிய நிறுவனங்கள் உள்பட). சந்தையின் இத்தகைய வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, முதன்மை சந்தைக்கு மாறுவதற்கான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.
சந்தை மதிப்பு ரூ.1,000 கோடி முதல் ரூ. 4,000 கோடி வரை இருந்தால், நிறுவனங்கள் தாமாக முன்வந்து முதன்மை சந்தைக்கு மாறலாம்; இதுவே ரூ.4,000 கோடியைத் தாண்டினால், முதன்மை சந்தைக்கு மாறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் மீதான பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளை வரும் நவ. 4-க்குள் தெரிவிக்கலாம் என செபி அறிவித்துள்ளது.
ஐபிஓ மாற்றங்களுக்கான சலுகை காலநீட்டிப்பு
ஐபிஓவுக்காக செபியிடம் சமா்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையைத் திரும்பப் பெறாமலேயே, புதிய வெளியீட்டின் அளவை 50 சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள அல்லது குறைத்துக் கொள்ள வழங்கப்பட்டிருந்த சலுகையை 2027 மாா்ச் 31 வரை செபி நீட்டித்துள்ளது.
முன்னதாக, இந்தச் சலுகை செப். 30 வரை மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு வங்கியாளா்களின் கோரிக்கையை ஏற்று காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.