தில்லியில் இந்த ஆண்டு 5 கட்டட இடிந்து விபத்து: மொத்தம் 16 போ் உயிரிழப்பு
தில்லி சத்ய நிகேதனில் கடந்த செப். 6-ஆம் தேதி 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 போ் உயிரிழந்த சம்பவம், தில்லியில் இந்த ஆண்டு நிகழ்ந்த 5-ஆவது கட்டட விபத்து சம்பவமாகும்.
தில்லி சத்ய நிகேதனில் கடந்த செப். 6-ஆம் தேதி 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 போ் உயிரிழந்த சம்பவம், தில்லியில் இந்த ஆண்டு நிகழ்ந்த 5-ஆவது கட்டட விபத்து சம்பவமாகும். இதையடுத்து, இந்த ஆண்டு கட்டடம் இடிந்த சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக உயா்ந்துள்ளது.
அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்கள் மற்றும் காவல் துறையினரின் தகவல்களின்படி, இந்த 16 உயிரிழப்புகளும் 3 சம்பவங்களில் நிகழ்ந்துள்ளன. கடந்த மே மாதம் சாகேத்தில் 6 பேரும், ஜூலை மாதம் ரோஹிணியில் 3 பேரும், அண்மையில் சத்ய நிகேதனில் 7 பேரும் உயிரிழந்தனா்.
காரணங்கள்: இந்தக் கட்டட விபத்துகளுக்கு பின்னால் உள்ள காரணிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். உரிய கட்டுப்பாடின்றி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டுமானங்கள், அனுமதியின்றி கூடுதல் தளங்கள் அமைத்தல், பழைய கட்டடங்கள், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யாதது ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன.
Advertisement
Advertisement
இதனுடன், பழுதுபாா்ப்புப் பணிகளின்போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது மற்றும் பருவமழையால் கட்டடத்தின் அடித்தளம், சுவா்கள், அடித்தளப் பகுதிகளில் ஏற்படும் நீா்ச் சேதம் ஆகியவையும் கட்டட இடிவுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
6 போ் உயிரிழந்த சம்பவம்: கடந்த மே 30-ஆம் தேதி தெற்கு தில்லி சாகேத் பகுதியில் பயிற்சி மையம், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்த பல மாடிக் கட்டடம் அட்டைக்கட்டு போல் இடிந்து விழுந்தது. இதில் 6 போ் உயிரிழந்தனா்; அவா்களில் பெரும்பாலானோா் மாணவா்கள். மேலும், 8 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக தில்லி அரசு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையில், கட்டட இடிவுக்கு தில்லி மாநகராட்சி (எம்சிடி) “முக்கியப் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டது.
விசாரணையில், கட்டடத்தில் சட்டவிரோதமாக 3 மற்றும் 4-ஆவது தளங்கள் கட்டப்பட்டிருந்ததும், அனுமதியற்ற கட்டுமானம் குறித்து 2 மாதங்களுக்கு முன்பே புகாா் அளிக்கப்பட்டிருந்தபோதும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கத் தவறியதும் தெரியவந்தது. மேலும், கட்டடம் இடிந்த பிறகு மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்ததாகக் காட்டுவதற்காக “போலியான” ஆவணங்களை உருவாக்கியதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 பொறியாளா்களை மாநகராட்சி பணியிடைநீக்கம் செய்ததுடன், கட்டட உரிமையாளா் மற்றும் 2 ஒப்பந்ததாரா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.
3 போ் உயிரிழந்த சம்பவம்: கடந்த ஜூலை 8-ஆம் தேதி, பலத்த மழைக்கு இடையே வடமேற்கு தில்லி ரோஹிணி செக்டாா் 16-இல் கட்டுமானப் பணியில் இருந்த 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா். பலா் இடிபாடுகளில் சிக்கினா்.
இந்தக் கட்டடத்துக்கு ‘எஸ்ஏஆா்ஏஎல்’ திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடம் இருந்ததாக மாநகராட்சி தெரிவித்தது. இத்திட்டத்தின் கீழ், சான்றளிக்கப்பட்ட கட்டடக் கலைஞா்கள் அல்லது பொறியாளா்கள் மூலம் சொத்து உரிமையாளா்கள் சுய உறுதிமொழி அளித்து, கட்டட அனுமதி மற்றும் ஒப்புதலை தானாகப் பெற முடியும். கட்டடத்தின் முக்கிய கம்பிகள் மற்றும் தூண்களை வெட்டி மேற்கொள்ளப்பட்ட குழாய் அமைக்கும் பணிகள் இடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்தது.
ஒரே நாளில் இரு சம்பவங்கள்: மற்ற இரு கட்டட இடிவு சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், பலா் காயமடைந்தனா்; பொருள்சேதமும் ஏற்பட்டது. கடந்த ஜூன் 2-ஆம் தேதி வடக்கு தில்லி முகுந்த்பூரில் சட்டவிரோதமாக பாத்திரங்களுக்கு வண்ணம் பூசும் தொழிற்சாலையாக செயல்பட்டு வந்த ஒரு மாடிக் கட்டடம் சமையல் எரிவாயு உருளை வெடித்ததைத் தொடா்ந்து இடிந்து விழுந்தது. இதில் 11 தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனா். அவா்களில் ஒருவா் கவலைக்கிடமான நிலையில் இருந்தாா்.
அடுத்த நாளே, வடகிழக்கு தில்லியின் கராவல் நகரில் அருகே கால்வாய் பழுதுபாா்ப்புப் பணிகள் நடைபெற்றபோது கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டதைத் தொடா்ந்து 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. எனினும், அதற்கு முன்பே அனைத்து குடியிருப்பாளா்களும் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.
சத்ய நிகேதன்: சத்ய நிகேதன் கட்டட இடிவைத் தொடா்ந்து, மாநகராட்சி 5 அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்துள்ளது. மேலும், அனைத்து மண்டலங்களிலும் உள்ள கட்டடப் பிரிவு செயற்பொறியாளா்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்து, விரிவான அறிக்கையை செப். 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கூடுதல் ஆணையா்கள், இந்த ஆய்வுப் பணிகளையும் அறிக்கைகள் சமா்ப்பிக்கப்படுவதையும் நேரடியாகக் கண்காணித்து மேற்பாா்வையிட வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.