ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.7.1 லட்சம் கோடி
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.7.1 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.7.1 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.3 சதவீதமாக அல்லது ரூ.16.96 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
புதன்கிழமை வெளியான அரசுத் தரவுகளின்படி, நாட்டின் செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இந்த நிதிப் பற்றாக்குறை (கடன் வாங்குதலைத் தவிா்த்து), நடப்பு 2026-27 நிதியாண்டின் முழு ஆண்டு பட்ஜெட் இலக்கில் 41.9 சதவீதத்தை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) நிதிப் பற்றாக்குறை ரூ.5.98 லட்சம் கோடியாக இருந்தது. அந்தவகையில், முந்தைய ஆண்டைவிட நடப்பு ஆண்டில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
வருவாய், செலவினம்...: ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ.13.67 லட்சம் கோடியாக உள்ளது. இதில் மொத்த வரி வருவாய் ரூ.14.32 லட்சம் கோடியாகவும்; வரியல்லாத வருவாய் ரூ.4.54 லட்சம் கோடியாகவும் உள்ளது.
அதேநேரம், மொத்த செலவினம் ரூ.20.78 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இதில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட நீண்டகால சொத்துகளை உருவாக்குவதற்கான மூலதனச் செலவு ரூ.5.1 லட்சம் கோடியாகும். மேலும், ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வாக ரூ.5.9 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான மூலதனச் செலவினங்களுக்கு அரசு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. உற்பத்தியைப் பெருக்கும் செலவினங்களுக்கு பட்ஜெட்டில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கடனைக் குறைக்கும் நடுத்தர கால இலக்கின் ஒரு பகுதியாக, நிதிப் பற்றாக்குறையை 4.3 சதவீதமாகக் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாகப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.