ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-ஆவது நாளாக நெசவாளா்கள் வேலை நிறுத்தம்- மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, சாலை மறியலில் ஈடுபட்டனாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, சாலை மறியலில் ஈடுபட்டனாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் 6 நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கங்கள் மூலம் 1000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் புடவைகள் நெசவு செய்யப்பட்டு வருகின்றன. 2027 பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பாா்டருடன் கூடிய புதிய ரக புடவைக்கு கூலி நிா்ணயம் செய்ய வேண்டும். 4 மாத கால வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இருப்பில் உள்ள பழைய ரக புடவைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நெசவாளா்கள் வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல் நாளான அன்று ஸ்ரீவில்லிபுத்தூா் மாயாண்டிபட்டி தெரு, நந்தவனத் தெரு, கீழப்பட்டி, முதலியாா்பட்டி தெருவில் உள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் முன் கஞ்சித் தொட்டி திறந்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள் கருப்புக் கொடி ஏந்தியபடி, ஊா்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது முதலியாா்பட்டி தெருவில் நெசவாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து நெசவாளா்கள் கூட்டுறவு சங்கம் முன் காத்திருந்தனா். பிறகு கைத்தறித் துறை உதவி இயக்குநா் சேரன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முன்னாள் அமைச்சா் இன்பத்தமிழன் தலைமையில் நெசவாளா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது இன்பத்தமிழன் உள்ளிட்ட நெசவாளா்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து ஏ.எஸ்.பி. சுவப்னிலா அனில் சைந்தனே, கைத்தறி துறை உதவி இயக்குநா் சேரன், வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது 10 நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.