FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சின்ன தூண்டில், பெரிய மீன்! என்ன? யுபிஐ கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் கோடி வசூலாகுமா?

யுபிஐ பரிவர்த்தனை மூலம் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் கோடி எம்டிஆர் கட்டணம் வசூலாகலாம் என்ற கணக்கீடு பற்றி..

18 செப்டம்பர் 2026, 5:08 pm IST
யுபிஐ கட்டணம்
பகிர்:

ரூ.2,000க்கும் மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் ஓராண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடி வசூலாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது உத்தேச கணக்குத்தான்.

நாடு முழுவதும் யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீத எம்டிஆா் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. காரணம், 0.4 சதவிகிதம் என்று சொன்னால், சிறிய தூண்டில் போல இருக்கும், ஆனால் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் கோடி வசூலாகும் என்று கணக்குப் பார்த்தால் பெரிய மீன் கிடைக்கும் என்பது தெரியும்.

அதெப்படி?

Advertisement

Advertisement

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.29.82 லட்சம் கோடி யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதில் 30 சதவிகிதம் தனிநபர்கள் வணிகர்களுக்கு செய்திருக்கும் பரிவர்த்தனை.

தனிநபர்கள் வணிகர்களுக்கு செய்த இந்த 30 சதவிகித பரிவர்த்தனைகளில் ரூ.2,000க்கு மேல் இருந்த, தற்போது எம்டிஆர் கட்டணம் வசூலிக்கத் தகுதியான பரிவர்த்தனைகள் மட்டும் 67 சதவிகிதம்.

எனவே, ரூ.29.82 லட்சம் கோடியில் தனி நபர்கள், வணிகர்களுக்கு செய்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 67 சதவிகிதத் தொகைக்கு 0.04 சதவிகிதம் எம்டிஆர் கட்டணம் வசூலித்ததாகக் கருத்தில் கொண்டால் ஆகஸ்ட் மாதம் ரூ.2,397 கோடி வசூலாகியிருக்கலாம்.

இந்த ரூ.2,400 கோடி என்பதை சராசரியான தொகையாகக் கொண்டால், 12 மாதங்களுக்கு என கணக்கிடும்போது இது ரூ.28,000 கோடி வரை இருக்கும் எனப்படுகிறது.

ஆனால், மிகத் துல்லியமாக இந்தத் தொகை வசூலிக்கப்படாது, காரணம், ரயில்வே, எரிபொருள், காப்பீடு போன்றவற்றுக்கு 5 ரூபாய் என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூ.75,000க்கு மேல் எவ்வளவு தொகை இருந்தாலும் அதற்கு ரூ.300 மட்டுமே வசூலிக்க முடியும். எனவே, ரூ.28 ஆயிரம் கோடி என்பதை தோராயமாகக் கொள்ளலாம். இது மாதத்துக்கு மாதம், மாறுபடும்.

ஒருவேளை, மத்திய அரசு, இந்த மொத்தத் தொகையில் 20 சதவிகிதத்தை மட்டும் பரிவர்த்தனை செயலி நிறுவனங்களுக்கு வழங்கும் என்று வைத்துக் கொணடால் அதுவே ரூ.5760 கோடியாக இருக்கலாம்.

தற்போது நஷ்டத்தில் இயங்கும் போன்பே போன்ற நிறுவனங்களுக்கு இந்தத் தொகை கிடைத்தால், அந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு தாறுமாறாக உயரலாம் என்பதே பொருளாதார நிபுணர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இது மட்டுமில்லை, இந்த எம்டிஆர் வசூல் தொகைக்கு மத்திய அரசு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலித்துக் கொள்ளும். பெரு நிறுவனங்களின் பாக்கெட்டுகளை நிரப்பியதோடு, கணிசமான தொகையை மத்திய அரசுக்கும் கிடைக்கும் வகையில் இந்த எம்டிஆர் கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கணக்கீட்டின் பின்னணியில்தான், எம்டிஆர் கட்டண விதிப்பு முறைக்கு, வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்திருக்குமா என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட, மத்திய அரசு அதனை மறுத்திருந்தது.

பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு வணிகர்கள், ஏழை, எளிய மக்களிடமிருந்து எம்டிஆர் கட்டணம் என்ற பெயரில் இந்தத் தொகையைப் பிடுங்கி, பெரு நிறுவனங்களுக்கு வழங்கி நாட்டை முன்னேற்றும் பாதையில் மத்திய அரசு கொண்டு செல்கிறதா என்றும் வணிகர்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

எம்டிஆர் கட்டணம் என்பது என்ன?

இந்த எம்டிஆர் என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை வழங்குநர் மற்றும் வங்கிகளுக்கு வணிகர்கள் செலுத்தும் கட்டணம்.

இந்த கட்டணங்களைக் கொண்டு நிதித் துறை சார்பான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பாதுகாப்பு, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது போன்றவற்றை செய்ய முடியும் என மத்திய அரசு தெளிவுபடுத்துகிறது.

இந்த என்டிஆர் கட்டணத்தை வங்கியும், டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும். கிரெடிட் கார்டுகளுக்கு 1 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை பரிவர்த்தனைத் தொகைக்கு ஏற்ப கட்டணமும், டெபிட் கார்டுகளுக்கு 0.9 சதவிகிதக் கட்டணமும் விதிக்கப்படுகிறது.

ஆனால், யுபிஐ சேவை இதுவரை கட்டணமில்லாமல் இருந்து வந்தது. தற்போது கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர்களுக்கு அல்ல என்றும் கூறுகிறது.

வணிகர்கள் மறைமுகமாக இந்தக் கட்டணத்தை எப்படியும் வாடிக்கையாளர்களிடம் சுமத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு, எம்டிஆர் சுமையை வாடிக்கையாளர் தலையில் சுமத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments