கேளீர் தமிழ் வரலாறு - 9: தமிழர் மறந்துபோன 'தமிழ்த் தொன்மை ஆராய்ச்சிக் கழகம்'!
இலண்டனிலே செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு முதன்மையான அமைப்பு 1903-ஆம் ஆண்டளவில் திருச்சிராப்பள்ளியின் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் ஒருவரைத் தனது அங்கத்தினராக ஏற்றுச் சிறப்பித்தது.
இலண்டனிலே செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு முதன்மையான அமைப்பு 1903-ஆம் ஆண்டளவில் திருச்சிராப்பள்ளியின் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் ஒருவரைத் தனது அங்கத்தினராக ஏற்றுச் சிறப்பித்தது.
அந்த உலகளாவிய அமைப்பு 'வேத்தியல் ஆசியக் கழகம்' எனத் தமிழில் வழங்கப்படும் 'இராயல் ஏசியாட்டிக் சொசைட்டி' ஆகும். இக்கழகத்தை 1823-இல் ஹென்றி தாமஸ் கோல்புரூக் என்னும் சமஸ்கிருத அறிஞராகிய ஆங்கிலேயர் நான்காம் ஜார்ஜ் மன்னரைப் புரவலராகக் கொண்டு நிறுவினார். அரசர் 'இராயல்' என்ற பட்டத்தை அந்த அமைப்புக்கு வழங்குவதாக அறிவித்தார்.
ஆசிய மக்களின் மொழிகள், பண்பாடு முதலியன குறித்த ஆராய்ச்சிகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட உயர் அமைப்பு அது. தான் உறுப்பினராக அங்கீகரிக்கும் அறிஞர்களுக்கு அந்த அமைப்பு 'எம். ஆர். ஏ. எஸ்.' (மெம்பர் ஆப் இராயல் ஏசியாட்டிக் சொசைட்டி) என்று பெயருக்குப் பின் இட்டுக்கொள்ளும் பெருமையை அக்கழகம் வழங்கிவந்தது.
Advertisement
Advertisement
அந்தக் கௌரவத்தைத்தான் திருச்சிராப்பள்ளித் தமிழ்ப் பண்டிதர் பெற்றிருந்தார். அவரைப் பாராட்டிச் 'சித்தாந்த தீபிகை'யின் 1903 ஜனவரி - பிப்பிரவரி இதழில் ஜே.எம். நல்லசாமி பிள்ளை ஒரு குறிப்பை எழுதியிருந்தார்.
அந்தத் தமிழ்ப் பண்டிதரைக் கற்றுத் துறைபோன அறிஞர் எனவும், 'சித்தாந்த தீபிகை'யில் அவர் எழுதியவை ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன எனவும், இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இராயல் ஏசியாட்டிக் கழகத்திற்கு அவர் ஓர் அணிகலனாகத் திகழ்வார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அறிஞர்- பண்டிதர் சவரிராயர்.
திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப்பண்டிதரான அவர் 'பண்டிட் டி. சவரிராயன்' என்றே ஆங்கிலத்தில் எழுதும்போதெல்லாம் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வார். பண்டிதர் டி. சவரிராய பிள்ளை எனவும் அழைக்கப்படுபவர் அவர்.
வியப்பாகத்தான் இருக்கின்றது! நாம் சொல்லிக்கொண்டிருக்கின்ற வரலாறுகள் பலவும் ஆட்டம் காணுகின்றன! ஏன் இத்தகைய உண்மைகள் உரிய வெளிச்சத்தைப் பெறவில்லை?
தமிழ்மண்ணில் விடுதலை இயக்கமன்றி வேறெந்தப் பேரியக்கமும் தோன்றாத காலம் அது. விடுதலைப் பேரியக்கம் காங்கிரஸ் அமைப்பும்கூடக் கூர்மைபெறாத சமூகச் சூழல் நிலவிய நாள்கள்தாம் அப்போது.
அப்படிப்பட்ட காலத்திலேயே தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான இயக்கங்களைப் பெரும் அறிஞர்கள் தொடங்கிச் செயற்கரிய செயல்களைச் சாதிக்கத் தலைப்பட்டுவிட்டனர். எப்படி இவற்றையெல்லாம் மறந்துபோனோம்?
1903 ஜனவரி.
தமிழின் - தமிழரின் தொன்மையை ஆராய அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. 'தமிழ்த்தொன்மை ஆராய்ச்சிக் கழகம்' என்பது அந்த அமைப்பின் தமிழ்ப் பெயர். ஆங்கிலத்தில் 'தி டமிலியன் ஆர்க்கியாலஜிகல் சொசைட்டி' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
வரலாற்றைத் தேடும் வரலாற்றுப் பெருமைகொண்ட முயற்சி!
இந்த அமைப்பை உருவாக்கியதிலும் ஒவ்வொரு செயல்பாட்டை நிகழ்த்தியதிலும் பண்டித சவரிராயர் மூலகாரணர்!
1902-ஆம் ஆண்டிலேயே இந்த அமைப்பிற்கான பூர்வாங்க முயற்சிகள் நடைபெற்று முடிந்திருந்தன.
1903 ஜனவரி 6-ஆம் தேதி சென்னையில் பிராட்வே பகுதியில் இருந்த தமிழ்த் தொன்மை ஆராய்ச்சிக் கழக அலுவலக வளாகத்தில் முதல் நிருவாகக் கூட்டம் கூடியது.
இந்த முதல் கூட்டத்திற்கு ஜே.எம். நல்லசாமி பிள்ளை தலைமை.
வடமொழிப் பேரறிஞராகத் திகழ்ந்த மாக்ஸ் முல்லரே எடுத்துரைத்த 'தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகளில் காணப்படும் சுயமான கூறுகளின் சிறப்புகள், திராவிட மொழிகளை ஆராய்வோர் அருகியிருத்தல்' முதலியனவற்றைத் தமது உரையில் நல்லசாமி பிள்ளை குறிப்பிட்டிருந்தார். பெ. சுந்தரம் பிள்ளையின் 'அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர்கள் தம் ஆய்வைக் காவிரி, கிருஷ்ணா, வைகை ஆற்றங்கரைகளிலிருந்து தொடங்க வேண்டும்' என்னும் கருத்தையும் உரையில் நினைவுகூர்ந்திருந்தார்.
வி. கனகசபை பிள்ளை, பண்டிட் சவரிராயன் முதலியோரின் முன்னோடிப் பணிகளையும் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத் துறை, டாக்டர் ஹுல்ஷ் தலைமையில் மேற்கொண்டுவரும் கல்வெட்டுப் பணிகளைப் பற்றியும் பேசியிருந்தார். இந்தக் களத்தில் மேலும் பல பணிகள் செய்யவேண்டியிருப்பதையும் எடுத்துரைத்திருந்தார். நம்மைப் போன்ற அமைப்புகள் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் இந்திய, எகிப்திய, அசிரியத் தொல்லியல் களங்களில் ஆற்றியுள்ள பெரும்பணிகளை நாம் அறியவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ் - தமிழரின் தொன்மையை ஆராயும் களத்தில் சிறப்பான தொடக்க உரையாக இந்தத் தலைமையுரை அமைந்திருந்தது.
இந்தக் கழகத்தின் தலைவராக என். இரத்தினசபாபதி பிள்ளையும், துணைத் தலைவர்களாக ராவ்பகதூர் பட்டாபிராம் பிள்ளையும் ஜே.எம். வேலு பிள்ளையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர், இரு துணைத்தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், பொருளாளர் ஆகியோருடன் பன்னிருவரைக் கொண்ட நிருவாக இயக்குநர் குழுவும் அமைக்கப்பட்டது. இரண்டு செயலாளர்களில் ஒருவராக விளங்கினார் பண்டிதர் டி. சவரிராயன்.
பொருளாளராகப் பொறுப்பேற்ற வழக்கறிஞர் தி. வீரபத்திர முதலியார். தமிழ் இலக்கண வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்த 'விருத்தப் பாவியல்' என்னும் யாப்பிலக்கண நூலை இயற்றிய பெருமைக்குரியவர்.
பன்னிரண்டு இயக்குநர்களில் சிலரின் பெயர்களை அறிந்தாலே இந்த அமைப்பு எத்தகைய சிறப்புடையது என்பது புரிந்துவிடும். ஜே.எம். நல்லசாமி பிள்ளை, 'இந்து', 'சுதேசமித்திரன்' ஆகிய இதழ்களின் ஆசிரியரான ஜி. சுப்பிரமணிய ஐயர், இலங்கையின் வி.ஜே. தம்பி பிள்ளை, தண்டலம் பாலசுந்தர முதலியார், பரிதிமாற்கலைஞர் எனப் புனைபெயர் பூண்ட சூரியநாராயண சாஸ்திரியார், எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் தலைவராகப் பின்னாளில் திகழ்ந்த ச. அனவரத விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள் எனப் பின்னாளில் புகழ்பெற்ற ஆர்.எஸ். வேதாசலம் பிள்ளை முதலியோர் நிருவாக இயக்குநர்களாக விளங்கினர்.
'தமிழ்த் தொன்மை ஆராய்ச்சிக் கழகம்' பன்னிரண்டாண்டுகள் ஆழமான, அழுத்தமான அரிய பணிகளை - பெரிய பணிகளை ஆற்றியிருக்கின்றது.
தென்னிந்தியாவின் செவ்விலக்கியங்களை முறையாக, அறிவியல்பூர்வமாக ஆராயத் துணைசெய்வது, மொழியியல் - தொல்லியல் - கல்வெட்டியல் - நாணயவியல் முதலிய களங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, இலங்கையை உள்ளடக்கிய தென்னிந்திய மக்களின், மொழிகளின், இலக்கியத்தின், தத்துவத்தின் துல்லியமான வரலாற்றை உருவாக்க ஆதாரங்களைச் சேகரிப்பது ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டது 'தமிழ்த் தொன்மை ஆராய்ச்சிக் கழகம்'. 1907ஆம் ஆண்டு முதல் 'தி டமிலியன் ஆண்டிகுரி' என்னும் ஆங்கில இதழை - தொடர் வெளியீடுகளை 1914 வரை இக்கழகம் வெளியிட்டிருக்கிறது.
முதன்மையான அறிஞர்களின் ஆராய்ச்சிப் படைப்புகள் இவற்றில் இடம்பெற்றன. உலக அறிஞர்களின் பார்வைக்குத் தமிழின் - தமிழர்களின் பெருமித இடத்தை இந்த இதழ் கொண்டுசேர்த்தது.
பண்டிதர் சவரிராயன், இலங்கையின் வி.ஜே. தம்பி பிள்ளை, கே.ஜி. சேஷ ஐயர், வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார், ஜே.எம். நல்லசாமி பிள்ளை, வி. வெங்கையா, தா. பொன்னம்பலம் பிள்ளை, எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், வி. கனகசபை, டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, அருள்தந்தை ஜே. இலாசரஸ், அ. முத்துத் தம்பி பிள்ளை முதலியோரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இவ்வெளியீடுகளில் இடம்பெற்றன.
வி. கனகசபை, ஜி.யு. போப், பெ. சுந்தரம் பிள்ளை, மு. இராகவையங்கார் ஆகியோரின் படைப்புகள் மறுவெளியீடுகளாக வந்தன.
வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியாரின் 'இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய ஜாதி வரலாறும்', மு. இராகவையங்காரின் 'வீரத் தாய்மார்', 'பழைய கைத்தொழில் வியாபாரங்கள்', 'ஸ்ரீவான்மீகரும் தென்னாடும்' ஆகியன தமிழிலேயே இடம்பெற்றன.
ஜி.யு. போப்பின் புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள் ஒரு தனித்தொகுதியாகவே வெளிவந்தன.
இவற்றையெல்லாம் கௌரவக் காரியதரிசியாகவும், காரியதரிசியாகவும் செயல்பட்டு வெளியிட்டவர் டி. சவரிராயன்.
1909 ஜனவரி 2-ஆம் நாள் இதன் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சுதேசமித்திரன் 6.1.1909-ஆம் தேதி இதழானது, அமைப்பின் பெயரைத் 'தமிழ்ச் சிற்ப விசாரணைச் சங்கம்' எனக் குறிப்பிட்டுக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கை சென்னை, இலங்கை, ஐரோப்பா ஆகியவற்றைச் சேர்ந்த 86 பேர் இதில் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர் எனத் தெரிவித்ததாக எழுதியிருந்தது. இக் கழகம் வெளியிட்ட 'தி டமிலியன் ஆண்டிகுரி' இதழைத் 'தமிழரின் பூர்விகம்' என்னும் பெயரால் 'சுதேசமித்திரன்' குறிப்பிட்டிருந்தது. மேலும் 'சென்ற வருடத்தில் இச்சங்க முயற்சியை நன்கு வளர்த்தவர் கௌரவக் காரியதரிசி பண்டித சவரிராயன்' எனப் பேசப்பட்டதாகவும், மீண்டும் இந்த அமைப்புக்குப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்த போது உ.வே. சாமிநாதய்யரை ஓர் இயக்குநராகத் தேர்ந்தெடுத்திருந்ததாகவும் கௌரவக் காரியதரிசியாகப் பண்டித சவரிராயனே மீண்டும் நியமிக்கப்பட்டதாகவும் எழுதியிருந்தது.
1911-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி இந்த அமைப்பின் ஆண்டுக் கூட்டம் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றபோது இதன் பெயரைப் 'பண்டைக் காலத் தமிழ்ச் சரித்திர ஆராய்ச்சிச் சங்கம்' எனக் குறிப்பிட்டுச் 'சுதேசமித்திரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி மிக விரிவாக ஆங்கிலத்தில் 1911 மே 'சித்தாந்த தீபிகை' இதழிலும் வெளிவந்திருந்தது.
இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக இதன் ஆண்டு நிகழ்வுகளை அரும்பாடுபட்டுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது. இன்னும் தேடிக்கண்டறிந்தால் வரலாறு முழுமைபெறும்.
அந்தக் காலத்தில் திரும்பிய திசையெல்லாம் பண்டிதர் சவரிராயர் பெயரே தமிழ்த் தொன்மையை ஆராயும் முயற்சிகளிலெல்லாம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. ஆனால் இன்றோ சரித்திரத்தின் இருண்ட ஏதோ ஒரு மூலையில் சவரிராயர் என்னும் பெயர் ஒளிந்துகிடக்கின்றது.
சவரிராயரின் தனிவரலாறும் தமிழ்வரலாறும்தான் என்ன? இன்றைய தமிழுலகம் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டுமல்லவா!
தமிழ் வரலாற்றில் பண்டிதர் சவரிராயரின் இடத்தைத் திரு.வி.க. தெளிவாக எடுத்துரைத்திருந்திருக்கிறார். 31-ஆம் தமிழர் மாநாடு காஞ்சிபுரத்தில் 1925 நவம்பர் 21-ஆம் நாள் கூடியது. அதில் தலைமையுரை ஆற்றிய திரு.வி.க. தமிழின் தொன்மையை ஆராயும் முயற்சிகளைப் பற்றிப் பேசினார். அப்போது இவ்வுண்மைகளைத் திரட்டிச் சரித்திர வடிவாக உலகுக்கீந்த கனகசபை பிள்ளை, சவரிராய பிள்ளை, நல்லசாமி பிள்ளை, சூரியநாராயண சாஸ்திரியார், சீநிவாச பிள்ளை முதலிய தமிழ்மக்கள் நன்றி என்றும் மறக்கற்பாலதன்று' எனக் குறிப்பிட்டிருந்தார்.
சவரிராயர் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தில் 20-1-1859-ஆம் நாள் பிறந்தார். தம் 65-ஆம் வயதில் 24-10-1923-இல் திருச்சி நகரில் காலமானார்.
தந்தை தேவசகாயம் பிள்ளை, தாயார் ஞானப்பிரகாசி அம்மாள். மனைவி பெயர் செபாஸ்தியம்மாள். சவரிராயருக்கு இரு மகள்கள். மூன்று மகன்கள்.
சவரிராயரின் மகன்வழிக் கொள்ளுப் பெயரர் டாக்டர் வி.தே.கி. சந்திரன் (காது, மூக்கு, தொண்டை மருத்துவர்) இப்போது எண்பதாம் அகவையில் சென்னையில் வசித்துவருகின்றார்.
சவரிராயர் தூத்துக்குடியில் பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். அக்காலத்தில் உழவர்களின் மேம்பாட்டிற்காகச் சங்கமொன்றை அமைத்துச் செயல்பட்டிருக்கின்றார். பின்னர் திருச்சி நகரின் தூய வளனார் (செயிண்ட் ஜோசப்) கல்லூரியின் தமிழ்த் துறையிலே 1894-ஆம் ஆண்டு சேர்ந்திருக்கிறார். மூன்றாண்டிற்குப் பின் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக உயர்வுபெற்றுச் சிறந்திருக்கின்றார்.
ஆங்கிலம், இலத்தீன் ஆகியவற்றில் புலமையாளர். சமஸ்கிருதமும் கற்றவர். பின்னாள்களில் விடுதலைப் போராட்டத்தில் - ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுத் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார். திருச்சி நகரசபை உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். தமிழில் 'ஸ்ரீ பகார்த்த விலாசம்' எனும் கிறித்தவ சமய நாடக இலக்கியமொன்றைப் படைத்துள்ளார். தமிழைப் பாடமொழியாக்கப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தீவிரமாகச் செயல்பட்டுள்ளார். ஆங்கிலத்தில் அவர் எழுதியவை மிகுதி. அவையெல்லாம் திரட்டப்பெற வேண்டியனவாக உள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் தலைநாள்களிலேயே இலண்டன் 'வேத்தியல் ஆசியக் கழக'த்தால் உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டவர் அவர். ஒருமுறை அவர் சமகாலத் தமிழறிஞர் மு. இராகவையங்காருக்குக் கடிதமொன்றை எழுதியிருந்தார்.
'தாங்கள் வெளியிட்ட வேளிர் வரலாற்றை (கொழும்பு) ஸ்ரீமான் வி.ஜே. தம்பிப் பிள்ளையவர்கள் எம்.ஆர்.ஏ.எஸ்., ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'ராயல் ஏஷியாட்டிக் ùஸாஸைடி'க்கு அனுப்பியிருக்கிறார்கள். அவ்விஷயம் அச்சங்கத்தாரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் 'மெம்பர்ஷிப்'தான் எம்.ஆர்.ஏ.எஸ். என்பது; தங்களுக்கும் அக்கௌரவம் உரித்தாகவேண்டுமென்பது என் அத்தியந்த விருப்பம்.' என அதில் எழுதியிருந்தார்.
தான் பெற்ற பேறு தன் சக தமிழறிஞரும் பெறவேண்டுமென மனமார விரும்பிய பண்டிதர் சவரிராயர் தமிழ் பெற்ற பேறு!
சவரிராயரின் முயற்சியில் தோன்றிய 'தமிழ்த்தொன்மை ஆராய்ச்சிக் கழகம்' தமிழ்நாடு பெற்ற பெரும்பேறு!
(தொடரும்)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.