வாழ்வில் உயர்ந்த மனிதன்!
குஜராத், பவநகர் மாவட்டத்தில் உள்ள கோர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மூன்றடி உயரமான கணேஷ் பரையா.
குஜராத், பவநகர் மாவட்டத்தில் உள்ள கோர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மூன்றடி உயரமான கணேஷ் பரையா. அவரைப் பார்த்த சாகச நிறுவனத்தினர், 'நல்ல சம்பளம் தருகிறோம். எங்கள் சர்க்கஸில் பணிபுரிய வாருங்கள்' என்று கூற, அதற்கு மறுப்புத் தெரிவித்தார் அவரது தந்தை. குறைந்த உயரத்தைக் குறையாக நினைக்காத கணேஷ் பரையா, கல்வியில் சிறந்து விளங்கினார். கஷ்டப்பட்டு படித்து 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருந்தாலும், உயரத்தைக் காரணம் காட்டி, மருத்துவப் படிப்புக்கான இடம் அவருக்கு மறுக்கப்பட்டது. சளைக்
காமல் சட்டப் போராட்டம் நடத்தி, நீதிமன்றத் தீர்ப்பு மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இன்று அரசு மருத்துவராக உயர்ந்துள்ளார். அவர் கூறியது:
'விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். பெற்றோரைச் சேர்த்து குடும்பத்தில் பத்துப் பேர். நான் மட்டும் குள்ளமாகப் பிறந்துவிட்டேன். குடும்பத்தில் கஷ்டம் நிலவினாலும், அப்பா சாகச நிறுவனத்துக்கு என்னை அனுப்ப மறுத்துவிட்டார். 5 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் அப்பா என்னைத் தூக்கிச் செல்வார். அவர் எனக்காகப் படும் கஷ்டத்தைப் பார்த்து நான் மிகவும் கவனத்துடன் படித்தேன். ஒரு விசித்திர ஜீவியாகப் பார்த்தவர்கள் இன்று என்னை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள், மதிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
ஆனால், எனது பயணம் எளிதாக அமையவில்லை.
12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 87 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றேன். 2018-இல் 'நீட்' தேர்வில் 233 மதிப்பெண்களைப் பெற்றேன். மூன்றடி உயரம், எனக்கு இருக்கும் 72 சதவீதம் உடல் இயக்கக் குறைபாடால், இந்திய மருத்துவக் குழு எனக்கு மருத்துவப் படிப்புக்கான இடத்தை வழங்க மறுத்தது.
நோயாளிகளுக்கு அவசர மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதில் உயரம் குறைவான எனக்கு சிரமம் ஏற்படலாம் என்று கூறினர். பல ஆண்டு கல்வி முயற்சியை வெறும் ஒரு உடல் அளவீட்டின் அடிப்படையில் மதிப்பிட்ட இந்திய மருத்துவக் குழுவின் முடிவு என்னை மிகுந்த மன வேதனைக்குள்ளாக்கியது.
நீதிமன்றத்தை அணுகினேன். வழக்கு நடத்த போதிய பணம் எங்கள் குடும்பத்திடம் இல்லை. இக்கட்டான சூழலில் தலாஜாவில் உள்ள நீல்கந்த் வித்யா பீட முதல்வர் எனக்கு உதவினார். மருத்துவக் குழுவின் முடிவை குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. மனம் தளராமல், மேல் முறையீட்டு வழக்கு மூலம் உச்ச நீதிமன்றத்தை நாடினேன்.
'விண்ணப்பதாரருக்குப் போதுமான உயரம் இல்லாதிருப்பது மட்டுமே அவரை மருத்துவப் படிப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப் போதுமான காரணம் ஆகாது' என்று 2018 அக்டோபர் 22-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2018-இல் மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டிருந்ததால், 2019 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் எனக்கு இடம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.
அடுத்தடுத்த ஆண்டுகள் பெரும் சவாலாக அமைந்தன. செய்முறைப் பயிற்சிகளின்போது எனக்குக் கூடுதல் கவனம் தேவைப்பட்டது. சவாலான மருத்துவப் பணிகளின் போது எனது நண்பர்கள் எனக்குத் துணையாக நின்றனர். படிப்பையும், அதைத் தொடர்ந்த கட்டாயப் பயிற்சிக் காலத்தையும் நிறைவு செய்தேன்.
2025 நவம்பர் 27-இல், பவநகரில் உள்ள சர் தக்தாசிங்ஜி பொது மருத்துவமனையில் மருத்துவ அலுவலராகப் பணியில் சேர்ந்தேன். நோயாளிகள் முதன்முதலில் எனது உருவத்தைக் கண்டு திகைத்தனர். பின்னர் என்மீது நம்பிக்கை வைத்தனர். வாழ்வில் ஒவ்வொரு நிராகரிப்புக்கும் நான் அணியும் 'வெள்ளைகோட்டே' மெளனமான பதிலாக அமைந்தது' என்கிறார் கணேஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.