FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாடு - ஹவாய் தீவுகளின் ஒற்றுமை!

அமெரிக்காவில் வசித்து வரும் எனது மகன் அண்மையில் குடும்பத்தாருடன் விடுமுறை நாள்களை அனுபவிக்க ஹவாய் தீவுக்குச் சுற்றுலா சென்றார்.

19 செப்டம்பர் 2026, 6:32 pm IST
பகிர்:

அமெரிக்காவில் வசித்து வரும் எனது மகன் அண்மையில் குடும்பத்தாருடன் விடுமுறை நாள்களை அனுபவிக்க ஹவாய் தீவுக்குச் சுற்றுலா சென்றார். அதனருகில் உள்ள பியூலோ தீவுக்குச் சென்றபோது, அங்கு எரிமலைக் கற்பாறைகளில் பார்த்த காட்சிகளையும், அதன் மீதான குறியீடுகளையும் நிழற்படங்களாக எனக்கு அனுப்பி வைத்தார். அதில் காணப்பட்ட குறியீடுகளும், தமிழ்நாட்டில் வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்களில் காணப்படும் குறியீடுகளும் ஒன்றுபோலவே இருந்தது ஆச்சரியம் தந்தன.

பியூலோ தீவு' என்றால் நீண்ட மலை அல்லது நீண்ட ஆயுள் மலை என்பது பொருள். அங்கு வாழ்ந்த பூர்வகுடிகளுக்கு இந்த இடம் புனிதமானது. இங்கே எரிமலையில் இருந்து வெளிவந்த பாறைக்குழம்பு (லாவா) உலர்ந்து கற்பாறைகளாக உள்ளன.

அந்தப் பாறையில் மனித வடிவங்கள், மிருகங்களின் வடிவங்கள், ஆமையின் வடிவம், சிறு சிறு குழிகள், வட்ட வடிவ குறியீடுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் கற்பாறையின் மீது கூர்மையான கற்களால் செதுக்கி அமைக்கப்பட்டவையாகும். கற்களை பாறைகளில் தேய்த்துக் கூர்மை செய்யப் பண்டைய மக்கள் மேற்கொண்ட செயலுக்கான சுவடுகளும் தென்படுகின்றன.

Advertisement

Advertisement

சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறியீடுகள் இங்குக் காணப்படுகின்றன. அந்தக் குறியீடுகளின் பொருள் என்ன? என்பதை அறிய முடியாவிட்டாலும், இங்கு வாழ்ந்தோரின் நம்பிக்கையை எடுத்துக் கூறும் வகையில் அது அமைந்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.

மனித வடிவம் முக்கோண வடிவில் அமைந்துள்ளது. கற்பாறைகளின் மீது அதிக அளவில் சிறு குழிகள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மானுடவியல் அறிஞர் மார்த்த பெக் என்பவர், குழந்தை பிறப்புடன் இதனை தொடர்புபடுத்திக் கூறியுள்ளார்.

இந்தக் குறியீடுகள், இப் பகுதியில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டுச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

இந்தக் கற்பாறைகளில் காணப்படும் கற்குறியீடுகள் போன்றே தமிழ்நாட்டிலும் வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்களிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாகும்.

ஓவியங்களைத் தவிர, கூர்மையான கல்லால் செதுக்கி அமைக்கப்பட்ட குறியீடுகள் விழுப்புரம் அருகே பெருமுக்கல், மதுரை அருகில் புலிப்பட்டி, கேரள மாநிலத்தில் எடக்கல், நாராயணபுரம், நல்லான் பிள்ளைபெற்றாள், தொண்டமானூர் (திருவண்ணாமலை அருகில்), கள்ளக்குறிச்சி அருகே குளம்தர்கா,

கங்கலேரி (கிருஷ்ணகிரி) உள்ளிட்ட இடங்களிலும்; கற்களை கூர்மை செய்வதற்கு மலைச்சரிவுகளில் தேய்த்த சான்றுகள் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல இடங்களிலும் காணப்படுகின்றன.

வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியை அறிய உதவும் இக்குறியீடுகளில், உலகளாவிய அளவில் ஒற்றுமையைக் காண்பது வியப்பளிக்கிறது.

தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments