FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெண்ணின் வாழ்வியலைப் பேசியவர்!

தமிழ் இலக்கிய உலகில் பெண்ணின் வாழ்க்கையை வெறும் உணர்ச்சிகளின் வழியாக மட்டுமல்லாமல், அவள் எதிர்கொள்ளும் சமூக, குடும்ப, பொருளாதார, பண்பாட்டு சிக்கல்களின் பின்னணியோடு பதிவு செய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன்.

19 செப்டம்பர் 2026, 10:19 pm IST
பகிர்:

தமிழ் இலக்கிய உலகில் பெண்ணின் வாழ்க்கையை வெறும் உணர்ச்சிகளின் வழியாக மட்டுமல்லாமல், அவள் எதிர்கொள்ளும் சமூக, குடும்ப, பொருளாதார, பண்பாட்டு சிக்கல்களின் பின்னணியோடு பதிவு செய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன். வேருக்கு நீர்' என்ற இவரது நாவல் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுத் தந்தது. விருதுகளையெல்லாம் கடந்த அவருடைய படைப்புகள், அவரை நல்ல எழுத்தாளராக ஒளிவீசி வாழ வைத்தது.

போலியான கற்பனைகளையோ, மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளையோ அவர் தமது படைப்புகளின் அடிப்படையாகக் கொள்ளவில்லை. சமூகத்தில் தான் நேரடியாகக் கண்டும், கேட்டும், உணர்ந்தும் அறிந்த வாழ்க்கை அனுபவங்களையே இலக்கியமாக மாற்றியவர். அதனால் அவரது எழுத்தில் யதார்த்தத்தின் வாசனையும், வாழ்வின் உண்மையான வலியும் வெளிப்படுகின்றன.

ராஜம் கிருஷ்ணனின் படைப்புலகை நோக்கும்போது, பெண்களின் அன்றாட வாழ்வில் நிகழும் சிறிய சம்பவங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பெரிய சமூகக் கேள்விகளை அவர் தனது எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தார். பெண்ணின் வாழ்க்கையை அவளுடைய மனநிலைக்குள் சென்று புரிந்துகொள்ள முயன்றதே ராஜம் கிருஷ்ணனின் எழுத்தின் முக்கியமான சிறப்பாகும்.

Advertisement

Advertisement

பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும்' என்று கூறுவதோடு நின்றுவிடாமல், அந்தச் சுதந்திரத்தைத் தடுக்கும் சமூக மனப்பான்மையையும் அவர் ஆராய்ந்தார். இதனால் அவரது எழுத்து ஒரு காலகட்டத்தின் பெண்களின் வாழ்க்கையை மட்டும் பதிவு செய்ததாக இல்லாமல், காலம் கடந்தும் வாசிக்கக்கூடிய சமூக ஆவணமாக மாறியது.

ராஜம் கிருஷ்ணனின் பெண்ணியச் சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்புகளில் சிறகா? பொற்கூண்டா?' என்ற கட்டுரை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பெண்ணுக்கு வசதியான வாழ்க்கை கிடைப்பதா முக்கியம்? அல்லது அவளுக்கான சுதந்திரம் கிடைப்பதா முக்கியம்? என்ற அடிப்படைக் கேள்வியைச் சுற்றியே இந்தப் படைப்பின் சிந்தனை நகர்கிறது.

வெளிப்படையாகப் பார்க்கும்போது ஒரு பெண்ணுக்கு குடும்பம், பொருளாதார வசதி, பாதுகாப்பு போன்ற அனைத்தும் கிடைத்திருக்கலாம். ஆனால், அவளுடைய சொந்த விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கும், தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிப்பதற்கும் இடமில்லையென்றால், அந்த வாழ்க்கை உண்மையில் சுதந்திரமானதா? இதைத்தான் பொற்கூண்டு' என்ற உருவகம் உணர்த்துகிறது.

பெண்கள் முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்தும் ராஜம் கிருஷ்ணனின் சிந்தனைகள் வலுப்பெறுகின்றன. உயர்கல்வி கற்ற பெண்ணாக இருந்தாலும், இறுதியில் அவளது மதிப்பு திருமணம், குடும்ப வாழ்க்கை போன்ற அளவுகோல்களால் மதிப்பிடப்படும் சூழல் இருந்தது. இந்த முரண்பாட்டை ராஜம் கிருஷ்ணன் தனது எழுத்தின் மூலம் சுட்டிக்காட்டுகிறார்.

பெண் வாழ்க்கையை திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என இரண்டாகப் பிரித்துப் பார்ப்பதைவிட, அவளை முழுமையான மனிதராகப் பார்க்க வேண்டும் என்ற சிந்தனையை ராஜம் கிருஷ்ணனின் எழுத்துகள் முன்வைக்கின்றன. அவர் எழுதிய பெண்கள் கற்பனையில் உருவாக்கப்பட்டவர்கள் போல் தோன்றுவதில்லை. அவர்கள் நம்மைச் சுற்றி வாழும் பெண்களைப் போன்றவர்கள். குடும்பப் பொறுப்புகளுடன் போராடுபவர்கள், சமூக எதிர்பார்ப்புகளுக்குள் சிக்கியவர்கள், பொருளாதாரத் தேவைகளால் கட்டுப்படுத்தப்படுபவர்கள், கல்விக்காகப் போராடுபவர்கள், தங்களுக்கான இடத்தைத் தேடுபவர்கள் எனப் பல்வேறு வாழ்க்கை நிலைகளில் அவர்கள் தோன்றுகின்றனர்.

அவரது கதாபாத்திரங்கள் வாசகர்களிடம் பரிதாபத்தை மட்டும் ஏற்படுத்துவதில்லை; சிந்திக்கவும் செய்கின்றன. ஒரு நல்ல இலக்கியப் படைப்பின் சிறப்பு அது எழுதப்பட்ட காலத்தைத் தாண்டியும் பொருத்தமாக இருப்பதில்தான் உள்ளது.

ராஜம் கிருஷ்ணன் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல; சமூகத்தை உற்றுப் பார்த்து அதன் முரண்பாடுகளை இலக்கியத்தின் வழியாகப் பதிவு செய்த சிந்தனையாளர். பெண்ணின் கண்ணீரை மட்டும் பதிவு செய்யாமல், அந்தக் கண்ணீருக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைத் தேடினார். பெண்ணின் துயரத்தை மட்டும் சித்தரிக்காமல், அந்தத் துயரத்தை உருவாக்கும் சமூக அமைப்புகளையும் கேள்வி எழுப்பினார். அதுவே அவரது படைப்புகளின் தனிச்

சிறப்பு. பெண்ணை இரக்கத்திற்குரியவளாக அல்லாமல், சிந்திக்கவும் முடிவெடுக்கவும் போராடவும் மாற்றத்தை உருவாக்கவும் கூடிய முழுமையான மனிதராகப் பார்க்க வேண்டும் என்ற பார்வையை அவரது எழுத்துகள் வலியுறுத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments