சிறுவர்மணி

ரௌடி எறும்பும், மூன்று கொசுக்களும்!

காட்டில் அடர்ந்த கிளைகளுடன் ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் தேனீக்கள் தேன்கூடு கட்டியிருந்தன. அதில் தேன் அதிகம் சேர்ந்ததால் அது மரத்தில் கசியத் தொடங்கியது. 

இடைமருதூர் கி.மஞ்சுளா

காட்டில் அடர்ந்த கிளைகளுடன் ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் தேனீக்கள் தேன்கூடு கட்டியிருந்தன. அதில் தேன் அதிகம் சேர்ந்ததால் அது மரத்தில் கசியத் தொடங்கியது.
அப்போது, அந்த மரத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்புகள் சில அந்தத் தேனை சுவைக்கத் தொடங்கின. அப்போது மாலை நேரம் ஆகிவிட்டதால், கொசுக்களின் தொல்லை ஆரம்பமானது. தேன் குடிக்கும் எறும்புகளைச் சுற்றிச் சுற்றி வந்து அவற்றின் காதுகளில் ரீங்காரம் பாடத் தொடங்கின....
எறும்புக் கூட்டத்தில் இருந்த ஒரு முதிய எறும்புக்குக் கோபம் வந்துவிட்டது. ""ஏதோ... கடவுளாகப் பார்த்து எங்களுக்குத் தேனை ஒழுகும்படிச் செய்திருக்கிறார்... அதுக்கும் இடைஞ்சல் செய்ய வந்துவிட்டீர்களா...?''
இதைக் கேட்டவுடன் மூன்று கொசுக்களைத் தவிர மற்ற எல்லாம் வேறு இடத்துக்குப் பறந்து சென்றன. மூன்று கொசுக்களில் ஒன்று, ""நீங்கள் தேன் சாப்பிடுவதைத் தடுக்க நாங்கள் வரவில்லை... என் நண்பனை உங்களிடமிருந்து காப்பாற்றிக் கூட்டிப்போகவே வந்தோம்... அவன் எங்கள் இனத்தைச் சேர்ந்தவன் அல்ல... உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்... அதை முதலில் தெரிந்து கொள்... உங்கள் இனத்தவரிடம் கூட உங்களால் ஒற்றுமையாக இருக்க முடியாதா? உடனே எங்கள் நண்பனை அனுப்பு... நாங்கள் மூவரும் நாளை காலை காட்டைவிட்டு நாட்டுக்குச் செல்ல வேண்டும்... நிறைய வேலைகள் உள்ளன...''
""என்ன புதிர் மேல் புதிர் போடுகிறாய்...? உன் நண்பன் எங்கே எங்களிடம் உள்ளான்? காட்டை விட்டு நாட்டில் போய் என்ன செய்யப் போகிறீர்கள்? ஒன்றும் புரியவில்லையே...''
""புரியும்படியாகவே சொல்கிறேன்.... உங்கள் எறும்பு இனங்களில் எத்தனை வகைகள் உள்ளன?''
""15,000 வகைகள் உள்ளன. அதை ஏன் இப்போது கேட்கிறாய்?''
""அந்த 15,000 இனங்களில் ஒன்றின் தலைவன்தான், உங்கள் இனத்தைச் சேர்ந்த எங்கள் நண்பனை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.''
அதற்குள் எறும்புகள் அனைத்தும் ஒன்றிகூடி அந்த முதிய எறும்பிடம் ஏதோ செய்திகளைப் பறிமாறிக் கொண்டன.
""அங்கே என்னக் கூடிப் பேசுகிறீர்கள்...?''
அந்த முதிய எறும்பு, மூன்று கொசுக்களையும் பார்த்து ""ஓ... அந்தக் குட்டி எறும்பா? எங்கள் இனத்தவரில் ஓர் இனத்தவரின் தலைவர் சொன்ன ஒரு செய்தியை இன்னொரு இனத்தைச் சேர்ந்த அந்த எறும்பு அந்த இனத் தலைவரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறது. அதனால் கோபம் கொண்ட அந்த இனத் தலைவர் அதைக் கூப்பிட்டு அனைவருக்கும் முன்பாகத் திட்டியிருக்கிறார். அந்தக் கோபத்தில் தலைவர்
தூங்கும்போது... உங்கள் இனத்தவரில் ஒருவரை அழைத்து வந்து அவரைக் கடிக்க வைத்துவிட்டது. மறுநாளே தலைவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். தலைவர் இறந்த சோகத்தில் அந்த இனத்தைச் சேர்ந்த ரெüடி எறும்பு ஒன்றுதான் உன் குட்டி நண்பனைக் கடத்திப் போய்விட்டதாம். அதைத்தான் இவர்கள் என்னிடம் சொன்னார்கள்''
""சிறிய உயிரினமான நீங்களா இப்படி செய்கிறீர்கள்?''
""நீங்களும்தான் சிறிய உயிரினம்... உங்கள் இனத்திலும்தான் தீயவர்கள் இருக்கிறீர்கள்... உண்மைதானே...?''
"ஆமாம்' என்று மூன்று கொசுக்களும் ஒப்புக்கொண்டன.
""அதேபோலத்தான்... எங்களுக்குள் 15,000 இனத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறோம்... நாங்கள் ஒவ்வொருவரும் அதனதன் இனத்தோடு கூட்டமாக வாழ்வோம். அவற்றுள் ஒருவகை இனத்தைச் சேர்ந்த எறும்புகள், மற்ற எறும்புகளை அடிமைப்படுத்தி வேலை வாங்கும் குணம் கொண்டவை. அதை "ரெüடி எறும்புகள்' என்று சொல்வார்கள்... தன் சொல்லைக் கேட்காத சிறு எறும்புகளைக் கடத்திச் சென்று, அவற்றுக்கு மூளைச் சலவை செய்து, தங்களுக்கு அடிமைகளாக மாற்றிவிடும்... இப்படித்தான் உன் குட்டி நண்பனை கொண்டுபோய் வைத்திருக்கிறது என நினைக்கிறேன்...!''
""கேட்கவே வியப்பா இருக்கே!!! ஆனால், நாங்கள் உங்களைப் போல் கடத்திச் சென்று மூளைச் சலவை எல்லாம் செல்ல மாட்டோம்''
""பின் என்ன செய்வீர்கள்?''
""எங்கள் இனத்திலும் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுள் எங்கள் மூவருக்கு மட்டும்தான் மிக முக்கியமான பணியைக் கடவுள் எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்?''
""நீங்கள் மூவரும் யார்? அப்படி என்ன முக்கிய பணி...?''
""எங்கள் இனத்தவரில் அனோஃபிலிஸ், ஏட்ஸ், கியூலக்ஸ் ஆகிய மூன்று இனத்தவருக்குத்தான் பொறுப்பும், பணியும் அதிகம்... நாங்கள் மூவரும்தான் மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள். அதனால் மக்களால் எங்களுக்கு ஆபத்தும் அதிகம். எங்கள் மூவரைப் பார்த்தால்தான் மக்கள் அஞ்சி நடுங்க வேண்டும்...''
""அப்படி என்ன செய்வீர்கள்?''
""நான் அனோஃபிலிஸ் இனத்தைச் சேர்ந்தவன். அதோ அவன் ஏட்ஸ் இனத்தைச் சேர்ந்தவன், மூன்றாமவன் கியூலக்ஸ் இனத்தைச் சேர்ந்தவன். "அனோஃபிலிஸ்' என்ற ஒருவகைக் கொசுக்களான நாங்கள்தான் மலேரியா நோயைப் பரப்புகிறோம்... "ஏட்ஸ்' வகைக் கொசுக்கள் மஞ்சள் காய்ச்சலை (மஞ்சள் காமாலை) பரப்புகின்றன. "கியூலக்ஸ்' கொசு இனமோ யானைக்கால் நோயைப் பரப்புகின்றன. கொசுக்களில் எத்தனையோ இனங்கள் இருந்தாலும்கூட , இந்த மூவகைக் கொசுக்களே மக்கள் நலனுக்கு எதிரானவை. இது மனிதர்களில் சிலருக்குத் தெரியாத உண்மை...''
""உங்கள் மூவரையும் பார்த்துத்தான் அதிகம் பயப்படணும் போலிருக்கே...''
""அதிலென்ன சந்தேகம்? உங்கள் இனத் தலைவரைக் கடித்ததுகூட எங்கள் மூவரில் ஏதாவது ஓரினமாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் அவர் உடனே இறந்துவிட்டார். நாங்கள் தாக்காமல் இருக்க வேண்டுமானால் உடனே எங்கள் நண்பனை அனுப்பச் சொல்லு...''
""சரி..சரி... அவசரப்படாதே... உங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது... இதில் மீண்டும் தாக்குதலா? வேண்டாம்... சமாதானமாகப் போய்விடுவோம். உங்கள் நண்பன் இரவுக்குள் உங்கள் இருப்பிடம் வந்துசேர்வான். சரி... காட்டைவிட்டு நாட்டுக்குப் போக
வேண்டும் என்றீர்களே... எதற்காக?''
""நவம்பர் மாதம் வரப்போகிறதே... மழைக்காலம், பனிக்காலத்தில்தான் நாட்டுக்குச் சென்று எங்கள் வேலையைச் செய்யத் தொடங்குவோம்... அப்போது மக்களால் எங்கள் இனத்தைச் சேர்ந்த பலருக்கும் ஆபத்து ஏற்பட்டு இறக்க நேரிடும்... இருந்தாலும் எங்கள் வேலையை நாங்கள் தொடர்ந்து செய்தாக வேண்டும்... எங்கள் மூன்று இனத்தவரால் உருவாகப்போகும் இந்த மூன்று வகையான நோய்களுக்கு முன்கூட்டியே பாதுகாப்பாக இருக்க வேண்டியது மக்களின் பொறுப்பு. அதற்காத்தான் சொன்னோம்... நாட்டுக்குக் கிளம்புகிறோம் என்று....
எறும்புகள் அனைத்தும் தேனும் வேண்டாம்... ஒன்னும் வேண்டாம் என்று.... மூன்று கொசுக்களையும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வரிசைகட்டி சரசரவென்று மரத்தின் அடியில் இருந்த எறும்புப் புற்றுக்குள் பதுங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT