FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விடியலின் தூதர்கள்!

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட எண்மக் காலத்திலும் மக்களுக்கு அறிவூட்ட, தகவல் பரிமாற்றம் செய்ய, கருத்தை உருவாக்க எனப் பல்வேறு விஷயங்களில் நாளிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

12 செப்டம்பர் 2026, 10:39 pm IST
சென்னை கோபாலபுரத்தில், தனது 94}ஆம் வயதிலும் செய்தித்தாள்களை விநியோகம் செய்யும் கே.சண்முக சுந்தரம். இந்தப் படம் சமூக ஊடகங்களில் எப்போதும் வைரல்தான்.
பகிர்:

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட எண்மக் காலத்திலும் மக்களுக்கு அறிவூட்ட, தகவல் பரிமாற்றம் செய்ய, கருத்தை உருவாக்க எனப் பல்வேறு விஷயங்களில் நாளிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாளிதழ்களை வீடுகள்தோறும் கொண்டு சேர்ப்பது என்பது, விநியோகிக்கும் பணியாக மட்டுமின்றி, சமூகத்துக்கும் மக்களுக்கும் இடையிலான பாலத்தை இணைக்கக்கூடிய முக்கியமான சங்கிலியாகவும் உள்ளது.

அதிகாலையிலேயே விழித்தெழுந்து, மழை, குளிர் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு இடையிலும் கடமையாற்றும் முகவர்களும், விநியோகிப்பாளர்களும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலானவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் பணியில் பங்கெடுக்கின்றனர்.

அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங், எடிசன், வால்ட் டிஸ்னி, வாரன் பஃபெட், குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் இளமைக் காலங்களில் தினசரி நாளிதழ்களை விநியோகிக்கும் வேலையைச் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மட்டுமே முதல் நாள் இரவு அச்சான நாளிதழ்கள் மறுநாள் காலையிலே கிடைத்து வந்தன. மற்ற ஊர்களுக்கும், தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் ஒருநாள் கழித்தே கிடைத்த நிலையை சைக்கிள்கள் மாற்றின. 'அனைவருக்கும் சைக்கிள்' என்ற நிலை ஏற்பட்ட பிறகு பெரும்பாலான ஊர்களுக்கு அச்சிட்ட ஏடுகள் மூலம் அறிவுப்புரட்சி ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் நாளிதழ் வாசிப்பு தேசத் துரோகமாகக் கருதப்பட்ட சுதந்திரப் போராட்டக் காலத்தில், வீடுகள்தோறும் நாளிதழ்கள், அச்சிட்ட தாள்கள் விநியோகிக்கப்பட்டபோதும், அது பரவலாகவோ, தொடர்ச்சியாகவோ இல்லை. ரகசியமாகவும், குறிப்பிட்ட நபர்களுக்குமே அவை கொண்டு சேர்க்கப்பட்டன.

பொது இடங்களிலும் தேநீர்க் கடைகளிலும் கூடிநின்று ஒருவர் உரக்க வாசிக்க, பலரும் கூடிநின்று கேட்கும் கூட்டு வாசிப்புப் பழக்கம் தமிழ்நாட்டில் 20- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எளிய மக்களிடையேயும் அரசியல் விழிப்புணர்வை வளர்த்தன.

செய்தித்தாள் கொண்டு தரும் பணியில் ஈடுபடும் சிலரிடம் பேசினோம்.

விநியோகப் பணியில் 63 ஆண்டுகள்

ஈரோடு மாவட்டம் அறச்சலூரைச் சேர்ந்த ஏ.எம்.ஆறுமுகத்திடம் பேசியபோது:

மறைந்த ஏ.என்.சிவராமன் 'தினமணி' ஆசிரியராக இருந்தபோது, 1966-ஆம் ஆண்டில் 8 ரூபாய் முதலீடு செலுத்தி, 22 நாளிதழ்களை வாங்கி விநியோகப் பணியைத் தொடங்கினார் எனது தந்தை ஏ.எஸ்.முத்துசாமி. வீட்டில் தினமணி நாளிதழ் கிடந்தால் அந்த வீட்டுக்கே பெருமை என்று வாசகர்கள் நினைக்கின்றனர். தற்போது போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களும் தினமணியைத்தான் விரும்பிப் படிக்கின்றனர்.

கரோனா காலகட்டம் பத்திரிகை விநியோகத் துறைக்கு சோதனையான காலகட்டமாக இருந்தது. நாளிதழ்களின் சந்தாதாரர்களும் வெகுவாகக் குறைந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து எண்மவழியில் செய்தியை அறிந்துகொள்ளச் சென்றவர்களும் உள்ளனர். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நானே எனது கையால் நாளிதழ்களை வழங்கினால்தான் திருப்தி அடைவேன்.

எம்ஜிஆர், இந்திரா காந்தி மறைவின்போது பல நாள்கள் வாகனப் போக்குவரத்து இல்லை. அதன்பின்னர் 10 நாள்கள் கழித்து, ஒட்டுமொத்தமாக ஒரேநாளில் வாங்கிப் படித்த தினமணி வாசகர்கள் இருக்கின்றனர்.

அறச்சலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தெய்வசிகாமணி (91) என்பவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தினமணியின் நீண்டநாள் வாசகரான அவர், சுமார் 30 ஆண்டுகள் வெளியான அத்தனை நாளிதழ்களையும் வீட்டில் அறை ஒதுக்கிச் சேமித்து வைத்திருந்தார்'' என்கிறார் ஆறுமுகம்.

700 பேருக்கு ஒற்றை நபராக விநியோகம்:

கோவை மாவட்டம், கோவைப்புதூரைச் சேர்ந்த அறுபத்தொரு வயதான கிருஷ்ணசாமி கூறியது:

''நான் 40 ஆண்டுகளாக ஒரே தொழிலாக நாளிதழ் விநியோகத்தையே செய்து வருகிறேன். விநியோகத்துக்கு முன்புபோல இளைஞர்கள் கிடைப்பதில்லை. அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து சென்று காலை 10 மணி வரை 700 பேருக்கும் நானே ஒற்றை நபராக விநியோகம் செய்துவிட்டு வருகிறேன். முதலில் சைக்கிள்தான். இப்போதுதான் இருசக்கர வாகனம் வாங்கியிருக்கிறேன்'' என்கிறார்.

விநியோகத் தொழிலின் காலமாற்றம்

திருப்பூர் மாவட்டம், கொடுவாயைச் சேர்ந்த விநியோக முகவர் நாற்பத்து ஆறு வயதான காளிமுத்து கூறியது:

''எனது தாத்தா எஸ்.எஸ்.ராமசாமி, அதன் பிறகு எனது தந்தை சிவசுப்பிர மணியம் என 3 தலைமுறையாக இந்தத் தொழிலில் இருக்கிறோம். இப்போது விநியோகத் தொழிலுக்கு வரும் இளைஞர்கள், பெட்ரோல் நிரப்பிய வண்டி, நல்ல மாத ஊதியம் எதிர்பார்க்கின்றனர். அதற்கும் கூட அதிகாலையில் எழுந்து வருவதற்குத் தயங்குகின்றனர். அறிதிறன்பேசிகள் அதிகரிப்பால் பலரும் இணையவழி நாளிதழ்களுக்கு மாறுகின்றனர். ஆனாலும், தினமணியின் வாசகர்கள் நிலையாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

எங்கள் பகுதியில் வாழ்ந்து வந்த சர்வோதயா சங்கத்தின் மாநிலச் செயலர் கே.என்.பழனிசாமி (86), தான் இறப்பதற்கு முந்தைய நாள் வரை தினமணி படித்து வந்தார். தாமதமாக விநியோகம் செய்தால், அழைத்து திட்டுவார். ஒரு எழுத்து விடாமல் படித்து, தேதி வாரியாக சரியாக அடுக்கி வைத்திருப்பார். தினமணிக்கு ஒருநாள் விடுமுறை என்றாலும் 'பத்திரிகைகளுக்கு எதற்காக விடுமுறை விடுகின்றனர்?' என்று கேட்பார். இதுபோன்ற அறிவுஜீவிகளுடன் எங்களுக்குப் பிணைப்பை ஏற்படுத்தியது இந்த விநியோகத் தொழில்'' என்கிறார் காளிமுத்து.

படங்கள்: மு.சச்சின் துவாரகா

செப்டம்பர் 4 - தேசிய செய்தித்தாள் கொண்டுதருவோர் தினம்

நாளிதழ்களை தினமும் வாசகர்களின் இருப்பிடத்துக்குக் கொண்டுவந்து தரும் முகவர் அல்லது பேப்பர் பாய் என்று அழைக்கப்படும் ஊழியர்களின் சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் செப்டம்பர் 4 -ஆம் தேதியை தேசிய செய்தித்தாள் கொண்டுதருவோர் தினமாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

நியூயார்க் நகரில் 'தி சன்' செய்தித்தாள் வெளியீட்டாளர் பெஞ்சமின் டே, 1833-ஆம் ஆண்டு, முதல் முறையாக பர்னி பிளார்ட்டி என்ற 10 வயதுச் சிறுவனை பேப்பர் பாய் ஆக பணியமர்த்தினார். ஆகவே அந்தத் தினத்தை நாளிதழ் கொண்டுதருவோர் தினமாக நிர்ணயித்தனர்.

இப்போது உலகம் முழுதும் எண்ம இதழ்கள் புழக்கத்தில் வரத் தொடங்கிவிட்ட நிலையில், இவர்களது சேவை மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இப்போதும் இவர்கள் சேவை தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments