FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லட்சியம் நிச்சயம் வெல்லும்

சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகன், இருபத்தொரு வயதில் முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். அலுவலராக முடியுமா?

19 செப்டம்பர் 2026, 8:23 pm IST
பகிர்:

சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகன், இருபத்தொரு வயதில் முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். அலுவலராக முடியுமா? கல்வியும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் முடியும்'' என்கிறார் அன்ஸார் ஷேக். மிகக் குறைந்த வயதிலே ஐ.ஏ.எஸ். அலுவலராக, 2016-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்வர்களை மலைக்க வைத்த அன்ஸார் ஷேக், இன்று மேற்கு வங்கத்தில் மால்டா மாவட்டத்தில் நீதித்துறை நடுவராகப் பணியாற்றி வருகிறார்.

பல தலைமுறையாக வறுமையை மட்டுமே சுவாசிக்கும் குடும்பத்தில் சாதனை படைத்த அவர் மேலும் கூறியது:

மகாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியத்தில் ஜல்னா மாவட்டத்தில், தொடர் வறட்சியால், பொருளாதார நெருக்கடிகளில் உழலும் ஷெல்கான்' கிராமத்தில் 1994-ஆம் ஆண்டு ஜூன் 1-இல் பிறந்தேன்.

Advertisement

Advertisement

தந்தை யூனுஸ் ஷேக் அகமது ஆட்டோ ஓட்டுநர். தாய் அடீலா தொழிலாளி. எனது இரு சகோதரிகளுக்கும் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. எனது தம்பி அனீஸ், குடும்பத்தைக் காப்பாற்றவும், எனது படிப்புக்கு உதவவும் ஏழாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் வேலைக்குச் சென்றார். குடும்பம் நடுத்தர நிலையை அடைய கல்வி மட்டுமே உதவும் என்பதை அறிந்தேன்.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91 சதவீத மதிப்பெண் பெற்றேன். புனே ஃபெர்குசன் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பயின்று, 73 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.

யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாரானேன். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம், 15 மணி நேரம் வரை போட்டித் தேர்வுக்காகப் படித்தேன். எனது பொருளாதாரச் சூழலை அறிந்த தனியார் பயிற்சி நிறுவனம் கட்டணத்தில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்தது. நண்பர்களும் ஆதரவளித்தனர். யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய இரண்டுக்கும் மராத்தி மொழியையே நான் தேர்வு மொழியாகத் தேர்ந்தெடுத்தேன்.

2016-ஆம் ஆண்டில், முதல் முயற்சியிலேயே 21-ஆம் வயதில் அகில இந்திய அளவில் 361-ஆவது இடத்தைப் பிடித்து, நாட்டில் மிகக் குறைந்த வயதில் ஐ.ஏ.எஸ். அலுவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இதையறிந்து எனது குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். நான் ஏதோ படிக்கிறேன் என்று தெரிந்தாலும், நான் பெரிய அலுவலராவேன் என்ற எதிர்பார்ப்பு என் குடும்பத்தில் என்றைக்குமே இருந்ததில்லை.

மேற்கு வங்கப் பிரிவில் மால்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட நீதித்துறை நடுவராகப் பணியாற்றி வருகிறேன். ஏழ்மையான பொருளாதாரப் பின்னணி, பின்தங்கிய கிராமம் எனப் பல விளிம்புநிலைச் சூழலில் எனக்குக் கிடைத்த அனுபவங்களே இன்று ஒரு நிர்வாகியாக நான் செயல்பட, பொறுப்புகளைக் கையாளும் வித்தையைச் சொல்லி வழிநடத்துகின்றன.

எனது பயணம், கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்றது பற்றியது மட்டும் கிடையாது. சூழ்நிலைகள் ஒருவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்க அனுமதி மறுக்கப்படும்போது, சாதனைகளைச் சாத்தியமாக்க முடியும் என்பதைச் சொல்லும். எண்ணற்ற தேர்வாளர்களுக்கு, குறிப்பாகப் பின்தங்கிய குடும்பப் பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு - சூழ்நிலைகளை எதிர்த்து வெல்லமுடியும். விடாமுயற்சியுடன் கூடிய லட்சியம் கனவை நனவாக்கும். இதற்கெல்லாம் எனது வாழ்க்கையே ஒரு சான்றாகும்'' என்கிறார் அன்ஸார் ஷேக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments