தமிழ்ச் சமூகத்திற்கே விருது!
பாரதியியல், வ.உ.சி. இயல், புதுமைப்பித்தன் இயல், உ.வே.சா. இயல் ஆகிய களங்களில் தனித்தன்மை கொண்ட வகையிலும் முன்னோடி நிலையிலும் அரும்பணிகளை ஆற்றிய ஆளுமைகளுள் தனித்துக் குறிப்பிடத்தக்கவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
பாரதியியல், வ.உ.சி. இயல், புதுமைப்பித்தன் இயல், உ.வே.சா. இயல் ஆகிய களங்களில் தனித்தன்மை கொண்ட வகையிலும் முன்னோடி நிலையிலும் அரும்பணிகளை ஆற்றிய ஆளுமைகளுள் தனித்துக் குறிப்பிடத்தக்கவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
இந்த முதன்மைக் களங்களைத் தாண்டியும் பழந்தமிழ்தொட்டு நவீன இலக்கியப் பரப்பு வரை பார்வை செலுத்துபவராகவும் உலகளாவிய தமிழியல் போக்குகளை உற்றுநோக்குபவராகவும் விளங்கும் சிலருள்ளும் முக்கியமானவர் இவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுந்துள்ள இவருடைய நூல்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் உலகு தழுவிய அறிவுத்துறையினருக்கும் தமிழ்மொழியின், தமிழ்ச் சமூகத்தின் உன்னதங்களை அழுத்தமாக எடுத்துரைப்பனவாகும்.
ஆராய்ச்சி, பதிப்பு, மொழிபெயர்ப்பு எனப் பல பரிமாணங்கள் காட்டிப் பளிச்சிடும் சீரிய அறிஞர் இவர். அடிப்படையில் வரலாறு கற்ற வரலாற்றுப் பேராசிரியராகிய இவர், தமிழறிஞரோ என வியக்கவைக்கும் நுட்பமான தமிழ்ப் புலமையாளரும்கூட.
Advertisement
Advertisement
முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. 1990 சூலை மாதத்தில் ஒரு நாள். சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஓர் 23 அகவை இளைஞர் புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப் புறப்பட்டார்.
அவரை வழியனுப்ப அன்று நான் சென்றிருந்தேன். அன்பு ஒருபுறம். நம்பிக்கையும் கணிப்பும் மறுபுறம். இவர் வரலாற்றில் ஆய்வு நிகழ்த்த மட்டும் செல்லவில்லை; வரலாற்றுச் சாதனை புரியச் செல்கின்றார் என்பது என் நம்பிக்கை. அந்த இளைஞர்தான் இன்று உலகம்
போற்ற, அன்றைக்கு அவர் சென்ற அதே தில்லி இன்று விருதளிக்கவுள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி. என் கணிப்பும் நம்பிக்கையும் பொய்க்கவில்லை என நானும் மகிழ்ச்சி கொள்கின்றேன். ஆம், ஆழமான, நுட்பமான, தனித்தன்மைகொண்ட ஓர் ஆராய்ச்சியாளர், தமது அரிய ஆராய்ச்சி நூலுக்காக இந்திய அரசின் உயரிய சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பால் சிறப்பிக்கப் பெற்றிருக்கின்றார்.
'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்னும் ஆராய்ச்சி நூல் சாகித்திய அகாதெமியின் விருதுக்குரிய நூல் மட்டுமன்று; தமிழ்ச் சமூகத்திற்கே விருது இந்த நூல். நூலாசிரியரும்தான்.
பாரதியியலின் தேடல் வரலாறும் ஆராய்ச்சி வரலாறும் நூற்றாண்டு கண்ட பெருமைக்குரியன. பாரதியாரின் இளவல் சி. விசுவநாதன், ரா.அ.பத்மநாபன், பெ. தூரன், இளசை மணியன், சீனி. விசுவநாதன் என நீளும் என் வரையிலான பாரதி எழுத்துகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் வரலாற்றில் எனக்கும் முன்னதாக அரும்பங்களிப்பைச் செய்தவர் இரா. வேங்கடாசலபதி.
பாரதியியல் தேடல் வரலாற்றில் உலகளாவிய முயற்சிகளை மேற்கொண்டவர். பிரான்சிலும் இங்கிலாந்திலும் உள்ள நூலகங்களில் அவர் தேடிக் கண்டுபிடித்த பாரதி புதையல்கள் 'இந்து' ஆங்கில நாளிதழில் பாரதி எழுதியனவற்றை முழுமைப்படுத்தின. 'விஜயா' நாளிதழில் இடம்பெற்றவற்றை நமக்கு வழங்கின.
இந்திய அளவில் ஆவணக்காப்பகம் முதலியவற்றில் அவரது தேடல்கள் பாரதியின் புதிய பரிமாணங்களை நமக்கு வெளிச்சமிட்டுக்காட்டின. 'பாரதி: கவிஞனும் காப்புரிமையும்' , 'எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)' என்னும் நூல்கள் பாரதியியலில் 'கண்டறியாதன கண்டோம்' என வியக்க வைக்கும் கருத்துப் பெட்டகங்களாகும்.
பாரதி இயலில் முதன்முறையாக அவர் உருவாக்கிய 'பாரதியின் கருத்துப் படங்கள்: 'இந்தியா' 1906-1910' என்னும் நூல் ஒரு சாதனை வெளியீடாகும். தமிழ் இதழியலில் கருத்துப் படங்களை ஆங்கிலேய அரசை விமர்சித்து முதன்முறையாக வெளியிட்ட பெருமை பாரதியாருக்கே உண்டென்றால் அவற்றையெல்லாம் முதன்முறையாகத் தொகுத்துப் பதிப்பித்த பெருமை இவருக்கே உண்டு.
கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சி.யின் ஈக வரலாறு இந்திய அளவில் உரிய கவனத்தைப் பெறவில்லை என்பது இன்னமும் தீராத நமது எண்ணமும் ஏக்கமும் ஆகும். இந்திய நெடும்பரப்பு மட்டுமன்று, உலகப் பரப்பே கவனம்கொள்ளும் வகையில் அண்மையில் ஆங்கிலத்தில் ஆ.இரா. வேங்கடாசலபதியின் கொடுமுடிப் படைப்பு 'சுதேசிக் கப்பல்' (ஸ்வதேசி ஸ்டீம்) என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
வ.உ.சி. இயலின் மகத்தான பங்களிப்பாளர் என ஒருவரை நாம் சுட்டமுடியுமென்றால் அது ஆ.இரா. வேங்கடாசலபதியைத்தான். ஏறத்தாழ நாற்பதாண்டுக்கால ஆய்வுப் பங்களிப்பு வரலாற்றைத் தொடர்ந்து இவர் நிகழ்த்தியிருக்கின்றார்.
தனது பதினேழாம் வயதில் வ.உ.சி. கடிதங்களை முதன்முறையாகத் திரட்டி வெளியிட்டு வ.உ.சி. இயல் பங்களிப்பைத் தொடங்கிய இவர், 'வ.உ.சி.யும் பாரதியும்', 'வ.உ.சி. யின் சிவஞான போதவுரை', 'திலக மகரிஷி: வ.உ.சி.', 'வ.உ.சி.: வாராது வந்த மாமணி', 'வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா' ஆகிய நூல்களை வழங்கியதோடு 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்னும் ஒப்பற்ற ஆராய்ச்சி நூலால், இப்போது வ.உ.சி.யின் வரலாற்றுப் பேரிடத்தைத் தேசமே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றார். வ.உ.சி. குறித்த தேடல்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த வேங்கடாசலபதி, வ.உ.சி. தேடலில் தொடங்கித்தான் பாரதியியலிலும் சங்கமித்தார்.
தமிழ்ச் சிறுகதையின் மூலமுகமாகத் திகழும் புதுமைப்பித்தனின் சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றுக்குச் செம்பதிப்புகளை உருவாக்கி, நவீன இலக்கியத்தின் முன்னோடிச் செம்பதிப்பாளராகவும் அரும்பணிகளை ஆற்றியிருக்கின்றார். புதுமைப்பித்தன் படைப்புகளுக்கு இன்று தமிழில் வழங்கும் பதிப்புகளுள் ஆதாரபூர்வமான பதிப்புகளாக இவர்தம் பதிப்புகளே திகழுகின்றன.
செவ்வியல் தமிழ் இலக்கியக் களத்தின் பல புதிர்களை விடுவிக்க வல்ல தரவுக்கருவூலமான 'உ.வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம்' முதல் தொகுதியையும் பதிப்பித்திருக்கின்றார். சமூகவியல் நோக்கிலான ஆய்வுகள் பலவற்றை முன்னெடுத்த பெருமையும் இவருக்குண்டு. 'திராவிட இயக்கமும் வேளாளரும்', 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை, முதலான ஆய்வுக் கட்டுரைகள்' முதலியன இவ்வகையில் சிறப்பன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பரிமாணம் என்னும் வகையில் மூத்த அறிஞர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களோடு இணைந்து உருவாக்கிய 'பின்னி ஆலை வேலைநிறுத்தம் 1921', 'நாவலும் வாசிப்பும்', 'முச்சந்தி இலக்கியம்', 'ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள் ஆளுமைகள்' முதலிய நூல்கள் இவர்தம் கொடைகளாக ஒளிர்கின்றன.
சில ஆண்டுகளுக்குமுன் பாரதி குறித்த தேடல்களுக்காக நான் தில்லி சென்றிருந்தபோது தில்லியிலிருந்து அமிருதசரசுக்குச் செல்லும் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பக்கத்து இருக்கையிலிருந்த ஒருவர் இந்தி நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தார். அதில் இடம்பெற்றிருந்த ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரணம் அது நம் பாரதியின் படம். இந்தி நாளிதழில் பாரதி படமா? இடம்பெறக் காரணம் ஆ.இரா. வேங்கடாசலபதியின் பாரதி குறித்த ஆங்கில நூலே. இந்தியாவின் பிற பகுதிகளிலும் உலகின் பல பகுதிகளிலும் பாரதியும் வ.உ.சி.யும் தமிழின் மேன்மைகளும் இப்படிக் கவனம்பெறக் காரணமான சமகாலத்தவர்களுள் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு முக்கியமான இடமுண்டு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.