கிழக்கு உக்ரைனில் தேர்தல்: ரஷியாவுக்கு அமெரிக்கா கண்டனம்
ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பாக,
ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பாக, ரஷியாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் கூறியதாவது:
கிழக்கு உக்ரைனில் ரஷிய அரசின் ஆதிக்கம் தொடந்து வருகிறது. இந்தச் சூழலில் அங்கு தேர்தல் நடத்தினால் அது நேர்மையான தேர்தலாக இருக்காது.
மேலும், மின்ஸ்க் ஒப்பந்தத்தில் ரஷியா அளித்துள்ள வாக்குறுதிகளும், இந்தத் தேர்தலை நடத்துவதன் மூலம் மீறப்படுகின்றன.
கிழக்கு உக்ரைன் பகுதியில் தனது நேர்மையற்ற நடவடிக்கைகளை ரஷியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது, சர்வதேச சட்டங்களுக்கு அந்த நாடு மதிப்பளிப்பதில்லை என்பதையே காட்டுகிறது.
அந்தப் பகுதியில் ரஷியா உருவாக்கியுள்ள டொனட்ஸ்க் லூஹான்ஸ்க் மக்கள் குடியரசு', உக்ரைன் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றார் அவர்.
கடந்த 2013-ஆம் ஆண்டில், உக்ரைன் அதிபராக விக்டர் யானுகோவிச் பொறுப்பு வகித்து வந்தார்.
ரஷிய ஆதரவாளர் என்று அறியப்படும் அவர், ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தார்.
அதையடுத்து, அவரது ஆட்சிக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிர்க்கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உக்ரைன் அரசு ஸ்தம்பித்தது.
இந்தச் சூழலில், உக்ரைனின் அங்கமாக இருந்த கிரைமியாவுக்கு படைகளை அனுப்பிய ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதையடுத்து, விக்டர் யானுகோவிச்சை அடுத்து அதிபராகப் பொறுப்பேற்றிருந்த பெட்ரோ போரஷென்கோவின் அரசுக்கு எதிராக, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.
ரஷிய ராணுவ உதவியுடன் சண்டையிட்ட அவர்கள், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினர்.
இந்தச் சூழலில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.