பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 14 பேர் பலி!
பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் 5 பேர் உள்பட 14 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 காவல்துறையினர் உள்பட 14 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாத் பள்ளத்தாக்கில் உள்ள கபால் நகரில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
உள்ளூர் பழங்குடியின அமைப்பான 'சுவாத் அமன் ஜிர்கா' சார்பில் இந்த அமைதிப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள், அந்தப் பகுதியில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புக் குறைபாட்டிற்கு காவல்துறையின் செயலற்ற தன்மையே காரணம் என்று குற்றம் சாட்டி, அங்கு அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் அங்குள்ள காவல் நிலையம் அருகே பேரணியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அங்கு சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அங்குள்ள காவல் நிலைய வளாகத்திற்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால், காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தான் வைத்திருந்த வெடிகுண்டை அந்த நபர் வெடிக்கச் செய்துள்ளார். இதனால், காவல் நிலைய வளாகம் சேதமடைந்ததுடன் காவலர்கள் 5 பேர் உள்பட 14 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தற்கொலைப் படையின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பலியானோரின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.
சுவாத் பள்ளத்தாக்கு ஒரு காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கோட்டையாகத் திகழ்ந்தது. அவர்கள் அங்கு ஷரியா சட்டத்தின் கடுமையான விதிகளை அமல்படுத்தி வந்தனர். பின்னர் 2007-ல் பாகிஸ்தான் ராணுவம் அங்கு ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களை வெளியேற்றி அரசின் கட்டுப்பாடிற்குக் கொண்டு வந்தது.
இந்தக் தாக்குதல் சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் தலிபான் அல்லது 'தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்' போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாதிகள் பலரும் ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆப்கன் அரசு அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஆப்கன் அரசு மறுத்து வருகிறது.
சமீப ஆண்டுகளில் பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் முக்கிய இலக்குகளாக காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Bomb attack on peace rally in Pakistan: 14 killed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.