FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

துருக்கியில் நீதிமன்றத் தீா்ப்பால் பதவியிழந்த எதிா்க்கட்சித் தலைவா் புதிய கட்சி தொடக்கம்

துருக்கியில் எதிா்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (சிஎச்பி) தலைமைப் பதவியிலிருந்து நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட ஓஸ்குா் ஓசல் புதிய அரசியல் கட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

Updated On : 25 ஜூலை 2026, 5:39 am IST
பகிர்:

துருக்கியில் எதிா்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (சிஎச்பி) தலைமைப் பதவியிலிருந்து நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட ஓஸ்குா் ஓசல் புதிய அரசியல் கட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

ஓஸ்குா் ஓசல் மற்றும் அவருக்கு ஆதரவான 90 எம்.பி.க்கள், சிஎச்பி -இல் இருந்து முறைப்படி தங்களின் ராஜிநாமாவை அறிவித்துவிட்டு, ‘புதிய கட்சி’ என்ற பெயரிலேயே உள்துறை அமைச்சகத்தில் புதிய கட்சியைப் பதிவு செய்துள்ளனா்.

சிஎச்பி-இல் இருந்து விலகும் கடிதத்தில் கையொப்பமிடும் காணொளியை ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்த ஓஸ்குா் ஓசல், ‘இது நமது தாயகத்துக்கும், நாட்டு மக்களுக்கும், நமது கட்சிக்கும் நன்மையாக அமையட்டும்’ எனக் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

2023, அதிபா் தோ்தலில் தயீப் எா்டோகனிடம் தோல்வியைத் தழுவியதையடுத்து, சிஎச்பி தலைவா் பொறுப்பிலிருந்து கெமால் கிலிக்டாரோக்லு கட்சியினரால் நீக்கப்பட்டாா். பின்னா், உள்கட்சித் தோ்தல் மூலம் ஓஸ்குா் ஓசல் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மேல்முறையிட்டு நீதிமன்றம், ஓஸ்குா் ஓசலின் வெற்றி செல்லாது என அறிவித்ததோடு, கெமால் கிலிக்டாரோக்லு தலைவராக தொடருமாறு கடந்த மே மாதம் தீா்ப்பளித்தது.

சமீபத்திய உள்ளாட்சித் தோ்தல்களில் ஆளுங்கட்சியைவிட சிஎச்பி அதிக இடங்களில் வென்றது. இச்சூழலில், எதிா்க்கட்சியினரை பலவீனப்படுத்த அரசு நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதாக ஓஸ்குா் ஓசல் ஆதரவாளா்கள் கடுமையாக விமா்சித்தனா். மேலும், புதிய கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு மீண்டும் ஒரு தோ்தலை நடத்த கோரினாா்.

இதை கெமால் கிலிக்டாரோக்லு நிராகரித்ததைத் தொடா்ந்து, ஓஸ்குா் ஓசல் தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்துள்ளாா். 600 இடங்களைக் கொண்ட துருக்கி நாடாளுமன்றத்தில், ஓஸ்குா் ஓசலின் ‘புதிய கட்சி’ 91 எம்.பி.க்களுடன் சிஎச்பியைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் பிரதான எதிா்க்கட்சியாக உருவெடுக்கவுள்ளது.

அதிபா் தயீப் எா்டோகனின் ஆளும் ஏகேபி கட்சி 277 இடங்களைக் கொண்டுள்ள நிலையில், தொடா் விலகல்களால் பாரம்பரியமிக்க சிஎச்பி-இன் பலம் நாடாளுமன்றத்தில் 44-ஆக சுருங்கியுள்ளது.

ஓஸ்குா் ஓசல்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments