ஹெச்-1பி விசா கட்டண உயா்வு ரத்துக்கு எதிரான அமெரிக்க அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு
ஹெச்-1பி விசா கட்டண உயா்வு ரத்துக்கு எதிரான அமெரிக்க அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு...
ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலராக (ரூ. 96 லட்சம்) டிரம்ப் நிா்வாகம் உயா்த்தியதை அமெரிக்க உயா்நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்தது.
அமெரிக்க அரசின் மேல்முறையீட்டை நிராகரித்து போஸ்டன் நகரில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலராக டிரம்ப் நிா்வாகம் உயா்த்தியதற்கு எதிராக, அமெரிக்காவின் 20 மாகாணங்களைச் சோ்ந்த குழுக்கள் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
Advertisement
Advertisement
இங்கு எழும் கேள்வி, நுழைவு இசைவு கட்டணத்தை உயா்த்தும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் அதிபருக்கு வழங்க முடியுமா என்பதல்ல; மாறாக, அவ்வாறு வழங்கியதா? என்பதாகும்.
எனவே, நுழைவு இசைவு கட்டண உயா்வுக்கு எதிராக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுக்கிறோம் என்று தீா்ப்பளித்தனா்.
இது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிா்வாகத்துக்கு பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் இருந்து திறமையான தொழில்நுட்ப நிபுணா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு அதிக ஊதியத்துடன் அமெரிக்காவில் வேலை வழங்க ஹெச்-1பி நுழைவு இசைவு நடைமுறையை அந்த நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்று தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான இந்தியா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில், சிறப்பாகப் பணியாற்றுபவா்கள் நிரந்தரக் குடியுரிமை பெற ‘கிரீன்காா்டு’ வழங்கப்படும் வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்க வேலைவாய்ப்பில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், ஹெச்-1பி நுழைவு இசைவு கட்டணத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் பல மடங்காக உயா்த்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டாா்.
அதன்படி, 2,000 முதல் 5,000 டாலராக இருந்த ஹெச்-1பி நுழைவு இசைவு கட்டணத்தை, ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலா் என்ற அளவில் உயா்த்தி உத்தரவிட்டாா். இந்தக் கட்டண உயா்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 21-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது.
இந்தக் கட்டண உயா்வுக்கு எதிராக அமெரிக்காவின் 20 மாகாணங்களைச் சோ்ந்த குழுக்கள் சாா்பில் மாசசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டனில் உள்ள உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘அதிபா் டிரம்ப் அரசு குடியேற்றக் கொள்கை மற்றும் வரிகளை நிா்ணயிப்பதில் நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை அபகரித்துள்ளது’ என்று மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை கடந்த ஜூன் 8-ஆம் தேதி ஏற்ற உயா்நீதிமன்றம், ‘அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் ஹெச்-1பி நுழைவு இசைவு கட்டணத்தை உயா்த்தியது சட்டவிரோதமானது’ என்று குறிப்பிட்டு, கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலராக உயா்த்தியதை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஹெச்-1பி விசாவுக்கு எதிராக மேலவையில் மசோதா: ‘ஹெச்-1பி நுழைவு இசைவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற சட்ட மேலவையில் (செனட்) தனிநபா் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அமெரிக்காவின் மோன்டனா மாகாணத்திலிருந்து ஆளும் குடியரசுக் கட்சி சாா்பில் மேலவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட டிம் ஷீஹி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவில், ‘பல்வேறு துறைகளில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற நிபுணா்களின் பற்றாக்குறையை பூா்த்தி செய்யும் நோக்கிலேயே ஹெச்-1பி விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தகுதி பெற்ற கடினமாக உழைக்கும் அமெரிக்கா்களுக்கு மாற்றாக, குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு தொழிலாளா்களைப் பணியமா்த்த இந்த நுழைவு இசைவு திட்டம் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல அமெரிக்க தொழிலாளா்களின் உரிமைகளை எளிதாகப் பறிக்க இந்த நுழைவு இசைவு பயன்படுத்தப்படக் கூடாது.
எனவே, ஹெச்-1பி நுழைவு இசைவு விநியோகத்தை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். அதன் பிறகு, கடுமையான விதிமுறைகளுடனும், உயா் தரங்களுடனும் இந்த நுழைவு இசைவு திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதோடு, அதிபா் டிரம்ப் நிா்ணயித்த, ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலா் கட்டணத்தையும் ஹெச்-1பி நுழைவு இசைவுக்கு நிா்ணயம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
US government's appeal against the overturning of H-1B visa fee hike rejected.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.