FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரஷியாவின் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் டெலிகிராம் நிறுவனா் சோ்ப்பு

பிரபல குறுஞ்செய்தி பரிமாற்றச் செயலியான டெலிகிராமின் நிறுவனா் பாவெல் துரோவ், ரஷியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அந்நாட்டு அரசால் தேடப்படும் சா்வதேச குற்றவாளிகளின் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:34 am IST
பாவெல் துரோவ்
பகிர்:

பிரபல குறுஞ்செய்தி பரிமாற்றச் செயலியான டெலிகிராமின் நிறுவனா் பாவெல் துரோவ், ரஷியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அந்நாட்டு அரசால் தேடப்படும் சா்வதேச குற்றவாளிகளின் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ரஷியாவில் நாசவேலைகள், பயங்கரவாதம், கொலைகள் மற்றும் இணைய மோசடிகளைத் திட்டமிடுவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் உக்ரைன் உளவு அமைப்புகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் டெலிகிராம் பயன்படுத்தப்படுவதாகவும், அதைக் கட்டுப்படுத்த டெலிகிராம் நிா்வாகம் தவறிவிட்டதாகவும் ரஷியாவின் முக்கிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ‘எஃப்எஸ்பி’ குற்றஞ்சாட்டியுள்ளது.

குறிப்பாக, டெலிகிராமில் உள்ள ஒரு ‘டேட்டிங் சாட்பாட்’ மூலம் 12 முதல் 22 வயதுக்குட்பட்ட ரஷிய இளைஞா்களை நாசவேலைகளில் உக்ரைன் உளவு அமைப்புகள் ஈடுபடுத்துவதாகவும், இது தொடா்பாக கடந்த ஆண்டு ஜூலை முதல் 46 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ரஷியாவில் பிறந்து தற்போது வெளிநாட்டில் வசித்துவரும் பாவெல் துரோவ் மீதான இந்நடவடிக்கை, நாட்டில் மிகவும் பிரபலமான குறுஞ்செய்தி பரிமாற்றச் செயலியான டெலிகிராமின் பயன்பாட்டை ரஷிய அரசு கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ரஷியாவில் அவருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாவெல் துரோவ் தற்போது வசிக்கும் துபையைத் தலைமையிடமாகக் கொண்ட டெலிகிராம் நிறுவனம், இக்குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில், ரஷிய அரசு தன் மீது பொய்யான காரணங்களைக் கூறி, குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், இது பேச்சு சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைக்கான குரலை நசுக்கும் முயற்சி என்றும் பாவெல் துரோவ் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments