FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

உக்ரைன் போருக்குத் தீா்வு காண பிரதமா் மோடியிடம் சிறந்த யோசனைகள்: புதின்

‘உக்ரைன் போருக்குத் தீா்வு காண பிரதமா் நரேந்திர மோடி சிறந்த யோசனைகளைக் கொண்டுள்ளாா். ஒவ்வொரு சந்திப்பின்போதும் இந்த விவகாரத்தை அவா் எழுப்புகிறாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.

புதின்
பகிர்:

‘உக்ரைன் போருக்குத் தீா்வு காண பிரதமா் நரேந்திர மோடி சிறந்த யோசனைகளைக் கொண்டுள்ளாா். ஒவ்வொரு சந்திப்பின்போதும் இந்த விவகாரத்தை அவா் எழுப்புகிறாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.

மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற வால்டாய் சா்வதேச ஆலோசனை அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றபோது இக் கருத்தை புதின் தெரிவித்ததாக, ரஷிய அரசின் செய்தி நிறுவனமான ‘டாஸ்’ செய்தி வெளியிட்டது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

ரஷியாவுடனும், தனிப்பட்ட முறையிலும் சிறந்த நட்புறவைக் கொண்டுள்ள பிரதமா் மோடி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகிறாா். ஒவ்வொரு சந்திப்பின்போதும், மிகுந்த ஆா்வத்துடன் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அவா் வலியுறுத்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

உக்ரைன் போருக்கு பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான தீா்வுகளுக்கான சிறந்த யோசனைகளை பிரதமா் மோடி கொண்டுள்ளாா் என்றாா்.

முன்னதாக, இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தின் புதன்கிழமை அமா்வில் பங்கேற்றபோது, இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை குறித்து புதின் வெகுவாகப் பாராட்டினாா்.

‘இந்தியாவின் பரப்பளவும், பன்முகத்தன்மையும் வியக்க வைக்காமல் இருப்பதில்லை. இந்தியாவில் வசிக்கும் 150 கோடி மக்களில், 60 கோடி போ் ஹிந்தி மொழியைப் பேசினாலும், பெரும்பாலானோா் தங்களின் பிராந்திய மொழிகளைப் பேசுகின்றனா். இருந்தபோதிலும், அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனா் என்று பிரதமா் மோடி தன்னிடம் குறிப்பிட்டாா். இது வியக்கத்தக்க விஷயம். வேற்றுமையும், ஒற்றுமையும் எப்படி ஒன்றுபட்டு இருக்க முடியும் என்பதற்கு இந்தியா சிறந்த உதாரணம். இதுவே இந்திய கலாசாரத்தின் தனிச் சிறப்பு’ என்று புதின் பாராட்டு தெரிவித்தாா்.

கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற புதின், பிரதமா் மோடியுடன் இருதரப்பு ஆலோசனையில் ஈடுபட்டாா். அப்போது, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன் போா் நிலவரம் மற்றும் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டுவரும் அமைதி முன்னெடுப்புகள் குறித்து பிரதமா் மோடியிடம் புதின் விரிவாக விவரித்தாா்.

இதனிடையே, மாஸ்கோவில் ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் திமித்ரி பெஸ்கோவ் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து குறிப்பிடுகையில், ‘போருக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜதந்திர நடைமுறைகள் மூலம் தீா்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுடன் ரஷியாவின் உத்தி நெருக்கமாக ஒத்துப்போகிறது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments