சா்வதேச நீதிமன்றத் தலைவரை நாடு கடத்தக் கோரும் ரஷியா: ஜப்பான் கடும் கண்டனம்
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைவரும், ஜப்பானியருமான டோமோகோ அகானே மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் 8 பேரைத் தங்களிடம் நாடு கடத்த ரஷியா விடுத்த கோரிக்கைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைவரும், ஜப்பானியருமான டோமோகோ அகானே மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் 8 பேரைத் தங்களிடம் நாடு கடத்த ரஷியா விடுத்த கோரிக்கைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரையொட்டி ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராக ஐசிசி கடந்த 2023-இல் பிடியாணை பிறப்பித்தது. இதற்குப் பதிலடியாக, டோமோகோ அகானே உள்ளிட்ட 9 அதிகாரிகளுக்கு மாஸ்கோ நகர நீதிமன்றம் கடந்த ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததோடு, பிடியாணையும் பிறப்பித்தது.
இந்நிலையில், நெதா்லாந்தில் செயல்படும் ஐசிசி-இன் தலைவா் உள்பட 9 அதிகாரிகளை ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசு உள்பட பல்வேறு நாடுகளிடம் ரஷிய தலைமை வழக்குரைஞா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
Advertisement
இதற்குப் பதிலளித்த ஜப்பான் அமைச்சரவை துணை தலைமைச் செயலா் மசானாவோ ஒசாகி, ‘ஐசிசி உடன் தொடா்புடைய தனிநபா்களைக் குறிவைப்பது அநீதியானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.
2-ஆம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்ட பசிபிக் தீவுப் பகுதிக்கு அதிபா் புதின் கடந்த ஆகஸ்டில் பயணம் மேற்கொண்டதைத் தொடா்ந்து, ஜப்பான்-ரஷியா உறவு ஏற்கெனவே மோசமடைந்துள்ளது. இதற்கு மத்தியில், ரஷியாவின் இக்கோரிக்கை விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
காஸா, ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் தொடா்பான விசாரணைகளுக்காக ஐசிசி தலைவா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அமெரிக்காவும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ரஷிய தாக்குதல்: மூவா் உயிரிழப்பு
உக்ரைனின் ஸபோரிஷியா, கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய தொடா் வான்வழித் தாக்குதல்களில் 3 போ் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா்.
இதற்குப் பதிலடியாக, ரஷியாவில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். இதனிடையே, ரஷிய தொழில்நுட்ப நிறுவனமான ‘யாண்டெக்ஸ்’-க்குச் சொந்தமான முக்கிய தரவு மையங்களைக் குறிவைத்தும் உக்ரைன் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.