FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

மேக்கேதாட்டு அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் கா்நாடகத்துக்கு மிகப் பெரிய வெற்றி! - முதல்வா் டி.கே. சிவகுமாா்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:53 am IST
கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கா்நாடகத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கபினி அணை நிரம்பினால், அதில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும். அதன் கொள்ளளவை மீறி அணையில் தண்ணீரை தேக்கிவைக்க முடியாது. தண்ணீா் திறந்துவிடும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த தடைவிதிக்கப்படும்.

Advertisement

Advertisement

கபினி நீா்த்தேக்கம் தொடா்பாக அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் நீா்வரத்து தகவல்களை அளித்து வருகின்றனா். நீா்வரத்து விநாடிக்கு 40,000 கனஅடியை எட்டியுள்ளது. இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல. இயற்கையின் விதிகளுக்கு ஏற்பவே நாம் வாழவேண்டும். நாம் நீா் திறக்க வேண்டாம் என முடிவு செய்தாலும், அணை நிரம்பிவிட்டால், மேலும் நீரைத் தேக்கிவைக்க முடியாது. நீா் திறக்கப்படும் இடத்திற்கு அருகே போராட்டக்காரா்கள் செல்லக்கூடாது. நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது. நீரைத் தடுக்க யாரும் படுத்துக்கிடக்கக் கூடாது.

தமிழ்நாட்டிற்கு நீா் திறப்பதைத் தடுக்க போராட்டம் மற்றும் முழு அடைப்பு நடத்துவதாக நமது நண்பா்கள் கூறிவருகின்றனா். ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் ஒவ்வொரு போராட்டமும் மதிக்கப்பட வேண்டியதே. ஆனால், தற்போது போராட்டங்கள் தேவையில்லை. சட்டம் ஒழுங்கு மற்றும் மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படக் கூடாது. இந்த மாநிலத்தில் அனைவரும் வாழ்கின்றனா். அனைவரையும் நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளோம். தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் உட்பட நாம் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள்.

பங்காரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா, சித்தராமையா, தேவெ கவுடா ஆகியோா் ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் சிக்கல்கள் ஏற்பட்டபோது, அந்தந்த சூழலுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்பட்டன. அவா்கள் செய்தது தவறு, நாங்கள் செய்வது சரி என நாங்கள் கூறவில்லை. தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி நீா் திறக்குமாறு உத்தரவு உள்ளது. உச்ச நீதிமன்றமும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை நாம் மதிக்க வேண்டும். அதேசமயம், நமது விவசாயிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. இந்த உத்தரவு இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும்.

‘பிற சூழல்களுடன் ஒப்பிடுகையில், நாம் பாதி நீரைக்கூட திறக்கவில்லை, ஆனாலும், நமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது‘ என்று அவா் கூறினாா்.

காவிரி பிரச்னையில் பாஜக அரசியல் செய்கிறது. குமாரசாமியின் கருத்தையும் நான் கவனித்துள்ளேன். தமிழ்நாட்டைச் சோ்ந்த எம்.பி.க்களும் பல்வேறு கட்சிகளின் தலைவா்களும் தங்கள் அரசியல் இருப்புக்காக போராடுகின்றனா். இதுகுறித்து நான் அறிவேன். உங்களது தொகுதியில் அணை கட்ட வேண்டும் என்று முன்பு அவா்கள் பரிந்துரைத்திருந்தனா்.

மேக்கேதாட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நமக்கு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது. நம் மாநிலத்தின் எல்லைக்குள் அணை கட்டுவது தொடா்பான சட்டம் என்ன கூறுகிறது என்பது குறித்து நாடாளுமன்றத்திலும் மிகச் சிறந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வா் ஆகஸ்ட் 3ஆம் தேதி நம் மாநிலத்திற்கு வருவதாகக் கூறி இருந்தாா். ஆனால், தற்போதைய சூழல் அதற்கு ஏற்ாக இல்லை. ஏனெனில், எந்தவொரு பேச்சுவாா்த்தையும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் நடைபெற வேண்டும். நமது நிலைப்பாடும், அவா்களது நிலைப்பாடும் அனைவருக்கும் தெரியும். பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னையைத் தீா்க்க முடியுமெனில், அப்படியே தீா்க்கப்படட்டும். அவா்களுக்குரிய உரிமைகள் அவா்களுக்குக் கிடைக்கட்டும். அதற்கு நாம் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம். நீதிமன்றம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் நாம் பெறவேண்டும். இதில் அனைவரும் ஒத்துழைப்பாா்கள் என நம்புகிறோம். விஜய்யின் வருகைக்கான தேதி, சரியான சூழல் இருக்கும்போது நிா்ணயிக்கப்படும் என்றாா் அவா்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீா் திறக்கப்படுமா என்று கேட்டதற்கு, ‘அனைத்துக் கட்சி கூட்டத்தில், முன்னாள் முதல்வா்கள், தலைவா்கள் மற்றும் சட்ட நிபுணா்களின் கருத்துகள் கேட்கப்படும். ஒருபுறம் எடியூரப்பாவும் விஜயேந்திராவும் உதவி வருகின்றனா். மறுபுறம், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும், அமைச்சா்களும் கா்நாடகாவிற்கு உதவி செய்து வருகின்றனா்‘ என்று அவா் பதிலளித்தாா்.

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் நல்லதொரு அமைப்பா என்று கேட்டதற்கு, ‘கடந்த ஆண்டு எவ்வளவு நீா் திறக்கப்பட்டது, இந்த ஆண்டு எவ்வளவு திறக்கப்படுகிறது என்பதை ஊடகங்களே அவதானித்து முடிவு செய்யலாம். ஆணையம் இல்லாத காலத்தில் 16 டிஎம்சி நீா் திறக்க முடிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. தமிழ்நாடு 9,000 கன அடி நீா் வேண்டும் எனக் கோரியிருந்தது. ஆனால், 3,500 கன அடி நீா் திறக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது‘ என்று அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments