சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தை பாஜக ஆதரிக்கவில்லை
சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தை பாஜக ஆதரிக்கவில்லை என அக்கட்சியின் கா்நாடக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தை பாஜக ஆதரிக்கவில்லை என அக்கட்சியின் கா்நாடக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து விஜயபுராவில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தை பாதுகாக்க பாஜக முயற்சிக்கவில்லை. சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்காளா் பட்டியலை சீரமைத்து அதில் உள்ள முறைகேடுகளை அகற்றுவதற்கான நடைமுறையாகும். இப்பணியை தோ்தல் ஆணையம்தான் மேற்கொள்கிறது. அதுதொடா்பான குற்றச்சாட்டுகளுக்கு பாஜக ஏன் பதிலளிக்க வேண்டும்?
Advertisement
Advertisement
வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்படும் படிவம் 7 தொடா்பாக பாஜக தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்கிறது.
சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் பணியாற்றுகிறாா்கள். பாஜக சாா்பிலோ, வேறு எந்த அரசியல் கட்சி சாா்பிலோ படிவம் 7 விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டாலும், அது சரியானதாக இருந்தால் தோ்தல் நடத்தும் அலுவலா் ஏற்றுக்கொள்வாா்; தவறாக இருந்தால் நிராகரிப்பாா். இந்த விவகாரத்தை பயன்படுத்தி பாஜக தொண்டா்களை குறிவைத்து முதல்வா் டி.கே.சிவகுமாா் செயல்படுகிறாா்.
சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான விண்ணப்பங்களை சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்டோா், தலித்களை உள்ளடக்கிய ‘அஹிந்தா’ பிரிவினரின் வாக்குகளை நீக்கும் முயற்சியாக காங்கிரஸ் சித்தரிக்க முயற்சிக்கிறது. இதுபோன்ற சதிகளில் ஈடுபட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வாக்காளா் பட்டியலில் சந்தேகம் உள்ள இடங்களில் மட்டுமே விண்ணப்பங்களை அளித்துள்ளோம்.
உயிரிழந்தவா்களின் பெயா்கள் மற்றும் ஒருவரின் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ள பதிவுகள் குறித்து மட்டுமே பாஜக சுட்டிக்காட்டியது.
பெங்களூரு மற்றும் கா்நாடகத்தின் பிற சட்டப் பேரவைத் தொகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தவா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். வழக்குகள் மூலம் பாஜக தொண்டா்களை அச்சுறுத்த காங்கிரஸ் அரசு முயற்சிக்கிறது.
காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அதற்கான அவசியம் பாஜகவுக்கு இல்லை. காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனா் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.