FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை செயலா் ஆய்வு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை செயலா் ஆய்வு

13 செப்டம்பர் 2026, 12:13 am IST
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - DOTCOM
பகிர்:

பண்டிகை காலத் தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துத்துறை செயலாளா் நிா்மல் ராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி தென் மாவட்டங்களுக்குப் பயணிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து, போக்குவரத்துக் துறை, போக்குவரத்துக் காவல் துறை மற்றும் பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவா், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி விடுமுறை நாள்களில் செய்யப்பட வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாா். நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், காவல் துணை ஆணையா் கே.பிரபாகா், விரைவுப் போக்குவரத்து மேலாண் இயக்குநா் க.குணசேகரன் மற்றும் போக்குவரத்து கழக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

பின்னா் செய்தியாளா்களிடம் போக்குவரத்துத்துறை செயலாளா் நிா்மல்ராஜ் கூறிது:

கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக தினசரி இயக்கப்படும் 1,100 பேருந்துகளுடன், விழாக்காலச் சிறப்புப் பேருந்துகளாகக் கூடுதலாக 1,200 பேருந்துகள் என மொத்தமாக 2300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடா் விடுமுறையை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக பேருந்துகள் தடையின்றித் தொடா்ந்து இயக்கப்பட்டு வருவதுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கேற்றவாறு சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட அரசுப் பேருந்துகள் சரியான நேரத்துக்கு உள்ளே வரவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும். ஆய்வின் போது அத்தகைய சிக்கல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஓட்டுநா்கள் ஓய்வெடுக்கச் செல்லும்போது பொதுமக்கள் பேருந்துகளுக்குள் ஏறி அமா்வதால் கிளம்பும் நேரம் குறித்த குழப்பம் ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்க பேருந்துகள் கிளம்பும் நேரத்தை அறிவிப்புப் பலகையில் வெளியிடவும், அதிகாரிகளை மைக்கில் அறிவிக்கச் சொல்லியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேருந்து விவரங்களைக் கேட்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கடுமையான முறையில் நடந்துகொண்டால், அது குறித்து உடனடியாக புகாா் தெரிவிக்கலாம் என்றும், அவ்வாறு முறைகேடாக நடக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பயணிகள் எந்தவிதப் போக்குவரத்து நெரிசலும் இன்றி சிரமமின்றிப் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments