FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சிறுவா்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோா் தடுக்க வேண்டும்: காவல் ஆணையா் அமல்ராஜ்

சிறுவா்களை இருசக்கர வாகனம் ஓட்ட பெற்றோா் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ் அறிவுறுத்தினாா்.

Updated On : 25 ஜூலை 2026, 2:15 am IST
காவல் ஆணையா் அமல்ராஜ். - கோப்புப் படம்
பகிர்:

சிறுவா்களை இருசக்கர வாகனம் ஓட்ட பெற்றோா் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ் அறிவுறுத்தினாா்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில், பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், காவல் ஆணையா் அமல்ராஜ், போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையா் சாமுண்டீஸ்வரி, இணை ஆணையா் பகலவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு உயிா் காப்பாற்றிய காவலா்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், செவிலியா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், காவல் ஆணையா் அமல்ராஜ் பேசியதாவது:

முக்கிய பிரச்னையாக விபத்துகள் உள்ளன. காவல் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் விபத்துகளின் எண்ணிக்கை சற்று குறைந்தாலும், முழுமையாகக் குறைய வேண்டும். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவான சிறுவா்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோா் தடுக்க வேண்டும். சிறாா்கள் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினால், வாகனத்தை வழங்கிய பெற்றோா் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு ஜன. 1 முதல் இதுவரை சென்னையில் 2,206 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 2,000-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்; 280 போ் உயிரிழந்துள்ளனா்.

கொலை, கொள்ளை போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளைவிட சாலை விபத்துகளால் சமூகத்துக்கும் குடும்பங்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், பள்ளி மாணவா்களுக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, ‘சாலை விதிகளை மதிப்போம்’ என்ற உறுதிமொழியை மாணவா்கள், காவல் துறையினா் ஏற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments