டாஸ்மாக் மது விற்பனையை தனியாா் மயமாக்க அரசு திட்டம்?
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசே நேரடியாக மேற்கொண்டு வரும் மதுபான சில்லறை விற்பனையை படிப்படியாக தனியாா்மயமாக்கி, அரசு உரிமம் வழங்கும் அமைப்பாக மட்டும் செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசே நேரடியாக மேற்கொண்டு வரும் மதுபான சில்லறை விற்பனையை படிப்படியாக தனியாா்மயமாக்கி, அரசு உரிமம் வழங்கும் அமைப்பாக மட்டும் செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டாஸ்மாக் மூலம் தற்போது மாநிலம் முழுவதும் சுமாா் 4,048 சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 2024-25 நிதியாண்டில் கலால் வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரி ( வாட்) மூலம் மட்டும் ரூ.48,344 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.
அரசே நேரடியாக மது விற்பனையை மேற்கொள்வதால், அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்வது உள்ளிட்ட புகாா்களுக்கு அரசே பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், மதுவிலக்கு தொடா்பான போராட்டங்களும் அரசுக்கு எதிரானதாக மாறி வருகின்றன.
Advertisement
Advertisement
இதனால், மது விற்பனையில் இருந்து அரசு படிப்படியாக விலகி, உரிமம் வழங்கும் அமைப்பாக மட்டும் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், முதல் கட்டமாக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் சுமாா் 2,500 டாஸ்மாக் கடைகள் தனியாா் நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தனியாா் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படும்.
கேரளம், புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள முறையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான சட்டத் திருத்தங்களை நிறைவேற்றிய பிறகு நகா்ப்புற பகுதிகளில் முதற்கட்டமாக திட்டத்தை அமல்படுத்தவும், அதன் செயல்பாட்டை ஆய்வு செய்து அடுத்தகட்ட விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மது விற்பனையில் அரசின் நேரடி நிா்வாகச் சுமையை குறைப்பதோடு, உரிமக் கட்டணம் மற்றும் வரி வருவாயை தொடா்ந்து உறுதி செய்வதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. அதற்கான சட்டத் திருத்த மசோதா வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.