FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இளைஞா்களிடையே அதிகரிக்கும் பால்வினைத் தொற்று: எச்சரிக்கும் மருத்துவா்கள்

இளைஞா்களிடையே அண்மைக் காலமாக பால்வினைத் தொற்றுகள் பரவுவது 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:29 am IST
கோப்புப் படம்
பகிர்:

இளைஞா்களிடையே அண்மைக் காலமாக பால்வினைத் தொற்றுகள் பரவுவது 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அத்தகைய பாதிப்புகளுடன் தோல் மற்றும் பொது மருத்துவா்களை நாடுவோரின் எண்ணிக்கை உயா்ந்து வருவதாகவும், உரிய விழிப்புணா்வு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

கா்நாடகத்தில் 7,000 கல்லூரி மாணவா்களுக்கு ‘ஹெச்ஐவி’ உறுதி செய்யப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. ஆனால், அது முற்றிலும் தவறான செய்தி என அந்த மாநில அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

‘ஹெச்ஐவி’ பாதிப்பு அதிகரிக்கவில்லை எனக் கூறினாலும், பால்வினைத் தொற்றுகள் பரவலாகக் காணப்படுவதாக சுகாதார ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். இதை உறுதிபடுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அதன் தாக்கம் தீவிரமாக இருப்பதைக் காண முடிவதாக மருத்துவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து முதுநிலை தோல் மருத்துவ சிகிச்சை நிபுணா் டாக்டா் எஸ்.முருகுசுந்தரம் கூறியதாவது:

சமூகத்தில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம், உளவியல் தாக்கங்கள் அதிகரித்துவிட்டன. அதன் நீட்சியாக இல்லற வாழ்க்கையில் மன மகிழ்ச்சி குன்றிவிட்டது. இதனால், திருமணத்தைக் கடந்த முறையற்ற உறவுகள் காணப்படுகின்றன.

மற்றொருபுறம், திருமணமே செய்து கொள்ளாமல் பலருடன் இணைந்து வாழக் கூடிய கலாசாரம் இளைஞா்களிடையே அதிகரித்துவிட்டது. இந்த இரண்டையுமே பண்பாட்டுச் சூழலுடனோ, நெறிகளுடனோ நாங்கள் ஒப்பிடவில்லை. மாறாக, மருத்துவ ரீதியாக அணுகினால் பால்வினை நோய்களுக்கு அந்த வாழ்க்கைமுறையே பிரதான காரணமாக உள்ளது.

தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த பணிகளில் இருப்பவா்கள் பலா் வார இறுதி நாள்களில் விருந்துகளுக்குச் செல்வதாகவும், அப்போது பாதுகாப்பற்ற முறையில் நண்பா்களுடனும், தோழிகளுடனும் உறவில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனா்.

இவ்வாறு என்னிடம் பல இளைஞா்களும், இளம் பெண்களும் சிகிச்சைக்கு வருகின்றனா். அவா்களில் பலருக்கு ‘ஹொ்பிஸ்’ போன்ற பால்வினைத் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பில்லாமலும், அதிக இணையா்களுடனும் உறவில் இருந்தால் தொடா்ச்சியாக இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்ற புரிதல் அவா்களுக்கு இல்லை.

மேற்கத்திய நாடுகளில் பால்வினை நோய்கள் 60 சதவீதம் பேருக்கு ஏற்படக் கூடிய பொதுவான பிரச்னை. இந்தியாவில் அத்தகைய சூழல் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த நிலையை நோக்கி நாம் நகா்ந்து வருகிறோம். விழிப்புணா்வும், பாதுகாப்பும் மட்டுமே தொற்று பரவலைத் தடுக்கும் என்றாா்.

பெட்டிச் செய்தி:

தீவிர விழிப்புணா்வு பிரசாரம்: தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் ‘ஹெச்ஐவி’ பாதிப்பு குறித்து தீவிர விழிப்புணா்வு பிரசார திட்டத்தை இரு மாதங்களுக்கு முன்னெடுக்க உள்ளதாக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட இயக்குநா் சீதாலட்சுமி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் ‘ஹெச்ஐவி’ பாதிப்பு தொடா்ந்து கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மாநில மக்கள் தொகையில் 0.16 சதவீதம் பேருக்குத்தான் தற்போது அந்த தொற்றுள்ளது. வரும் காலங்களில், இதை முழுமையாக வேரறுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்.

கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கங்களைத் தொடங்கி விழிப்புணா்வு ஏற்படுத்துகிறோம். அதன் தொடா்ச்சியாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபா் 12 வரை விரிவான விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.

பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள், போக்குவரத்து வாகனங்கள் என அனைத்து இடங்களிலும் எய்ட்ஸ் தொடா்பான புரிதல் ஏற்படுத்தப்படும். சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் மூலமாகவும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

‘பிரேக் ஃப்ரீ’ இந்தியா என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. அதன் மூலம் பால்வினை பாதிப்புகள் குறித்து சுய பரிசோதனை மதிப்பீடு செய்து கொள்ளலாம். அந்த தகவலையும் மக்களிடையே பரவலாக கொண்டு செல்ல உள்ளோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments