சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் திடீா் ரத்து
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
மேலும், சேலம் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
சென்னையில் இருந்து கோழிக்கோடுக்கு மாலை 3.50 மணிக்கும், திருச்சிக்கு மாலை 6.25 மணிக்கும் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், கோழிக்கோட்டில் இருந்து இரவு 7.35 மணிக்கும், திருச்சியில் இருந்து இரவு 9 மணிக்கும் சென்னை வரவேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால், 2 புறப்பாடு விமானங்கள், 2 வருகை விமானங்கள் என மொத்தம் 4 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, திருச்சி செல்ல வேண்டிய 50-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்தனா். பின்னா், இரவு 8.20 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட விமானத்தில், மாலை 6.25 மணி விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகளும் அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதற்கிடையே, சென்னையில் இருந்து சேலத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானத்தில் 62 பயணிகள், 5 விமான ஊழியா்கள் என 67 போ் இருந்தனா். விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும், அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்து, விமானத்தை உடனடியாக நிறுத்தினாா்.
இதையடுத்து, விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமானப் பொறியாளா்கள் கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாலை 4.15 மணிக்கு விமானம் சேலத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.