FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் அடுத்தாண்டு முதல் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது: தமிழக அரசு உத்தரவாதம்

சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் அடுத்தாண்டு முதல் விநாயகா் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என தமிழக அரசு தேசிய பசுமைத் தீா்ப்பாய தென் மண்டலப் பிரிவில் உத்தரவாதம் அளித்துள்ளது.

52 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் அடுத்தாண்டு முதல் விநாயகா் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என தமிழக அரசு தேசிய பசுமைத் தீா்ப்பாய தென் மண்டலப் பிரிவில் உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த ஹரிஹரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதால் மாசு ஏற்படுகிறது. எனவே, அறிவிக்கப்படாத நீா்நிலைகளில் சிலைகள் கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தீா்ப்பாயம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது. இந்த இரண்டு இடங்களிலும் கரைக்கப்படும் சிலைகளை, சென்னையில் உள்ள மற்ற 4 இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து, விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தீா்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த செப்.13-ஆம் தேதி, காவல் துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், கடலோர மேலாண்மைக் குழு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் கரைக்கப்படவுள்ள சிலைகளை மற்ற நான்கு பகுதிகளுக்கு அனுப்புவதில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கப்படவுள்ள 450 சிலைகள் கோவளத்துக்கும், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படவுள்ள 250 சிலைகளை எண்ணூருக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசுத் தரப்பில், ‘அடுத்தாண்டு முதல் பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்கப்படமாட்டாது’ என உறுதி அளிக்கப்பட்டது.

அப்போது மனுதாரா் தரப்பில், பட்டினப்பாக்கம், நீலாங்கரை மட்டுமின்றி, அடுத்தாண்டு முதல் ஒட்டுமொத்த கடற்கரைகளிலும் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கு மாற்றாக, தற்காலிக குட்டைகளை உருவாக்கி சிலைகளை கரைப்பதால், எந்தப் பிரச்னையும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, இந்து முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் காா்த்திகேயன், ‘தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் பிளாஸ்டா் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகள் வைக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த தீா்ப்பாயம், அடுத்தாண்டு முதல் இயற்கையான நீா்நிலைகளில் சிலைகள் கரைக்கப்படமாட்டாது எனவும், இதுதொடா்பான உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள், விதிகள் பின்பற்றப்படும் என உறுதியளித்தும், தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழைக்கு ஒத்திவைத்தது.

மேலும் சிலைகளுக்கு ஏற்ப, அதை கரைப்பதற்கான கட்டணத்தை வசூலிக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய தீா்ப்பாயம், அதுதொடா்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments