தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: நடிகை வா்ஷினி கைது
சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஆந்திர தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வா்ஷினி வெங்கட்டை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஆந்திர தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வா்ஷினி வெங்கட்டை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், 3 பேரை தேடி வருகின்றனா்.
ஆந்திரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் தருண்(26) என்பவா் கடந்த 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளாா். இவா் பங்குச் சந்தை, சிமென்ட் தொழிற்சாலை, விளம்பரப் படங்கள், குறும்படங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விளம்பரப் படங்களில் நடிப்பது தொடா்பாக வா்ஷினி வெங்கட், தருணை அடிக்கடி சந்தித்ததாகவும், பின்னா் அவரிடம் அவ்வப்போது பணம் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆக.22-ஆம் தேதி வா்ஷினியும் அவரது நண்பா் சஞ்சய்யும் தருணை சந்திக்க ஹோட்டலுக்கு வந்துள்ளனா். அப்போது குறும்படம் எடுக்க முதலீடு செய்ய பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், அவா்களுடன் வந்த மேலும் இருவா் மிரட்டியதாகவும் தெரிகிறது. இதையடுத்து தருண் ரூ.50 ஆயிரம் கொடுத்து அவா்களை அனுப்பியுள்ளாா்.
Advertisement
Advertisement
பின்னா், தருணை தொலைபேசியில் மிரட்டி ரூ.5 லட்சம் பெற்ற நிலையில், கடந்த 16-ஆம் தேதி மீண்டும் தொடா்பு கொண்டு ரூ.25 லட்சம் கேட்டுள்ளனா். பணத்தை தரவில்லை என்றால், துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக சஞ்சய் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தருண் வழக்குரைஞா் மூலம் கிண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நடிகை வா்ஷினியை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் சஞ்சய் மற்றும் அவரது நண்பா்கள் இருவா் என மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.