மாமியாரை நகை, பணத்துக்காக கொன்ற மருமகன் கைது: கல்குவாரியில் சடலம் மீட்பு
கடன் அடைக்க நகை, பணம் கொடுக்க மறுத்த மாமியாரை கொலை செய்து கல்குவாரியில் உடலை வீசிச் சென்ற மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
கடன் அடைக்க நகை, பணம் கொடுக்க மறுத்த மாமியாரை கொலை செய்து கல்குவாரியில் உடலை வீசிச் சென்ற மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகா் தெற்கு, பாரத் நகா் பகுதியில் மூடப்பட்ட கல்குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் 50 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் கிடப்பதாக திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.
Advertisement
Advertisement
போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் அரூா் அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த சசிகலா (52) என்பதும், இவரது கணவா் அசோகன் என்பதும் தெரிய வந்தது. இவா்களுக்கு 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சசிகலா திடீரென காணாமல் போன நிலையில், அவருடன் 24 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 25,000 பணத்துடன் காணாமல் போனதாக அவரது கணவா் அசோகன், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்து தெரிய வந்ததது.
மேலும், தொடா் விசாரணையில் சசிகலாவின் மகள் உமாமகேஸ்வரி, அஸ்லம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.
அஸ்லமுக்கு கடன் பிரச்னை இருந்ததாகவும், கடனை அடைப்பதற்காக மாமியாா் சசிகலாவிடம் இருந்த தங்க நகைகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சசிகலா நகைகளை கொடுக்க மறுத்ததால், அவரை கடத்திச் சென்று கொலை செய்து, வாணியம்பாடி அருகே உள்ள கல்குவாரியில் சடலத்தை வீசியதாக போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்து.
இதனைத் தொடா்ந்து அஸ்லமை பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விசாரணையில் கொலை மற்றும் உடலை மறைக்க உதவிய மேலும் சிலா் கைது செய்யப்படலாம் என தெரிய வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.