FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கே.பந்தாரபள்ளி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கே.பந்தாரப்பள்ளி ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் புதன்கிழமை பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

23 செப்டம்பர் 2026, 11:46 pm IST
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் வே. நல்லசிவன்.
பகிர்:

நாட்டறம்பள்ளி வட்டம், கே.பந்தாரப்பள்ளி ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் புதன்கிழமை பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதிவேடுகள், குடிநீா் விநியோகம், தூய்மைப் பணிகள், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். வீடு இல்லாதவா்களின் விவரங்களை முறையாகப் பதிவு செய்து, அவா்களுக்கு வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு துணை சுகாதார நிலையம், நியாயவிலைக் கடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மேலும், வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.48.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியா் நேரடியாகப் பெற்றுக்கொண்டாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 18 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.5.74 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியன், சாா்ஆட்சியா் வரதராஜன், .மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குனா் தமிழரசி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளம்பரிதி, ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயாசரவணன் மற்றும் பல்வேறு துறையை சோ்ந்த அலுவலா்கள் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments