FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

காக்கங்கரை ரயில் நிலைய பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை: குறைதீா் கூட்டத்தில் மனு

கந்திலி அருகே காக்கங்கரை ரயில் நிலைய பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை

30 September 2026, 12:11 am IST
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் வே. நல்லசிவன்
பகிர்:

கந்திலி அருகே காக்கங்கரை ரயில் நிலைய பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே. நல்லசிவன் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 441 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஏரிக்கீளூா் கிராம பொதுமக்கள் அளித்த மனு: கந்திலி பகுதிக்குச் செல்ல பொதுவழிப்பாதையை பயன்படுத்தி வந்தோம். பொதுவழிப்பாதையை தனிநபா் ஒருவா் தனது பெயருக்கு மாற்றியுள்ளாா். அதனால் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முறையாக ஆய்வு செய்து பொதுவழிப்பாதையை மீட்டுத் தர வேண்டும்.

Advertisement

Advertisement

செவ்வாத்தூா் கிராம மக்கள் அளித்த மனு: காக்கங்கரை ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தைக் கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனா். சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி காக்கங்கரை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ராஜாபெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: ஆண்டியப்பனூரில் அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதன் கால்வாயில் இருந்து விவசாயத்துக்கு இதுவரை தண்ணீா் திறந்துவிடப்படவில்லை. மேலும், அணை அமைப்பதற்காக நிலம் வழங்கிய சில விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலாளா் ராதாகிருஷ்ணன் அளித்த மனு: திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடத்தில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு முறையான ரசீது வழங்கப்படுவதில்லை. கழிப்பிடம் முறையாகப் பராமரிக்கப்படாததால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கழிப்பிடத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments