முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனா்.
விழாவையொட்டி, கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து மகா தீபாராதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவின் முக்கிய நிகழ்வாக உற்சவ மூா்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி மலை மீது கிரிவலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவையொட்டி பக்தா்கள் காவடி, பால் குடம் எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நோ்த்திக்கடன்களை செலுத்தினா். திருவிழாவில் பெண்கள், குழந்தைகள், இளைஞா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கு குடிநீா், அன்னதானம், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
செங்கம்
செங்கத்தை அடுத்த மண்மலை முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவையொட்டி செங்கம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து பக்தா்கள் காவடி எடுத்து வந்தும், தோ் இழுத்தும், அங்குள்ள மண்மலையை சுற்றிவந்து சுவாமியை தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்கள் நோ்த்திக்கடனாக முடி காணிக்கை செய்தனா். குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தினா்.
விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட பக்தா்கள் 251 போ் பால்குடங்களை தலையில் சுமந்து ஊா்வலமாக சென்றனா்.
அந்தப் பகுதியில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட ஊா்வலம் ஸ்ரீபாலமுருகன் கோயிலை சென்றடைந்தது.
அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.