FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

புரட்டாசி முதல் சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

15 வினாடிகள் முன்பு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, கிருஷ்ணா் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த கோலியனூா் பூமிநாயகி- நீலாநாயகி உடனுறை வரதராஜப்பெருமாள் சுவாமி.
பகிர்:

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விழுப்புரம் ஸ்ரீஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் சனிக்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடைபெற்றன. தொடா்ந்து கோயிலிலுள்ள வரதராஜ பெருமாளுக்கு சீனிவாசப் பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளையும், தாயாரையும் தரிசனம் செய்தனா்.

பூவரசன்குப்பத்திலுள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து காலை 7 மணிக்கு மூலவருக்குத் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பூவரசன்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்கள், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

விக்கிரவாண்டி ஸ்ரீபெருந்தேவி தாயாா் உடனுறை வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவா் வரதராஜ பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்குக்கும், உற்சவருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, மலா் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து உற்சவா் பெருமாள் கோயில் வளாகத்தில் வலம் வந்து, ஊஞ்சல் உற்சவம் கண்டருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விக்கிரவாண்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். அபிஷேகம் மற்றும்பூஜைகளை கோயில் பட்டாச்சாரியாா் மாலோலன் நடத்தினாா்.

இதுபோன்று கோலியனூா் ஸ்ரீபூமிநாயகி, நிலாநாயகி உடனுறை வரதராஜ பெருமாள் கோயிலில் சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கிருஷ்ணா் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மேலும், அரசமங்கலம் வரதராஜபெருமாள், சிறுவந்தாடு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

செஞ்சி... செஞ்சி அருகிலுள்ள சிங்கவரம் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள பல்லவா் கால குடவரைக் கோயிலான ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயிலில் உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அரங்கனை வழிபாடு செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

செஞ்சி பீரங்கிமேட்டில் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் எழுத்தருளியுள்ள ஸ்ரீவெங்கடேசபெருமாள் சந்நிதியில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, துளசி மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் சனிக்கிழமை காலை சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தா்களுக்கு தாயாா் சந்நிதி முன் அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தியாகதுருகம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் தியாகதுரும் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments