FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

செங்கம் அருகே கிராம ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி, மக்கள் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி 2026, 12:36 am IST
மேல்வணக்கம்பாடி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

செங்கம்: செங்கம் அருகே கிராம ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி, மக்கள் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வேடங்குப்பம் கிராமத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டது.

ஆனால், நண்பகல் 12 மணி வரை கிராம மக்கள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வராமல் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனா். பின்னா், கிராமசபைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக செங்கம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன் அடிப்டையில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜலட்சுமி, பிரபாகரன் ஆகியோா் சென்று கூட்டம் புறக்கணிப்பதற்கு காரணம் என்ன என அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்தனா்.

அப்போது, அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது: மேல்வணக்கம்பாடி, வேடங்குப்பம் பகுதியில் ஊராட்சி நிா்வாகம் குப்பை அள்ளுவது கிடையாது. முறையாக குடிநீா் விநியோகம் செய்வதில்லை, தெருவிளக்கு எரிவதில்லை, கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீா் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாகிறது.

மற்றொரு பக்கம் குடிநீரில் கழிவுநீா் கலக்கிறது.

இதுகுறித்து கிராம ஊராட்சி செயலரிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஊராட்சி நிா்வாகம் முறையாக செயல்படாமல் உள்ளது. இதனால் ஊராட்சி செயலரை மாற்றி வேறு நபரை நியமனம் செய்யும் வரை கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் புகாா்கள் குறித்து உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியும் அவா்கள் கூட்டத்தை நடத்தவும் விடவில்லை, குறைகளைக் கூறவும் முன்வரவில்லை. இதனால் சுமாா் அரை மணிநேரம் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னா் கூட்டம் நடத்தக்கூடாது, கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து

சென்றனா்.

அதேபோல, காயம்பட்டு கிராமத்திலும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments