தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன: அர்ஜுன் சம்பத்
தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஆம்பூர் ஜவஹர்லால் நேரு நகர், பஜார், ரெட்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியவர்கள் வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் ஏற்பட்டுள்ள நிலத்தடிநீர் பாதிப்பை கண்டித்தும் போராட்டம் நடத்த வேண்டும். ஆந்திரத்தில் கிருஷ்ணா-கோதாவரி இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மழையால் கிடைத்த தண்ணீரை வீணாகக் கடலில் கலக்கச் செய்துள்ளோம். நீர் நிலைகளை, நதிநீரை பாதுகாக்க காவிரி, தென்பெண்ணை, பாலாற்றை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சிலை திருட்டு, சிலை கடத்தல், உண்டியல் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
திருக்கோயில் பாதுகாப்புப் படை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர், ஊர்காவல் படையினரையும் ஒருங்கிணைத்து திருக்கோயில் பாதுகாப்புப் படை ஏற்படுத்தி பலப்படுத்த வேண்டும்.
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் திறமையாகப் பணியாற்றி வருகிறார்.அவரை மாற்றும் முயற்சியை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது. சிபிஐ விசாரணை தேவையில்லை. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணையே போதுமானது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அவற்றை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை அந்தந்த மாநில அரசுகள் குறைக்க வேண்டும். எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் அந்த அமைப்புகளுக்கு "சிலீப்பர் செல்' எனப்படும் பதுங்கு தீவிரவாதிகள் உருவாகியிருக்கிறார்கள்.
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எந்தக் கட்சிகளும் இடம் கொடுக்கக் கூடாது என அனைத்து கட்சித் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
பேட்டியின்போது, கட்சி நிர்வாகிகள் ரமேஷ், குமரன், கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.