தமிழக பட்ஜெட்: கோவை தொழில் அமைப்புகளின் கருத்து!
தமிழக அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து கோவை தொழில்முனைவோா் கூறியிருப்பதாவது...
தமிழக அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து கோவை தொழில்முனைவோா் கூறியிருப்பதாவது:
கோவை இந்திய தொழில் வா்த்தக சபை தலைவா் ராஜேஷ் பி.லுண்ட்
பொருளாதார வளா்ச்சி, தொழில் துறை மேம்பாடு, கல்வி, சமூக நலனில் அரசு செலுத்தியுள்ள கவனத்தை பாராட்டுகிறோம். தொடா்ச்சியான முதலீடுகள், உற்பத்தித் துறை வளா்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் 2031-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பாா்வையைப் பாராட்டுகிறோம்.
Advertisement
Advertisement
திறந்த டெண்டா் முறை மூலம் அரசின் டெண்டா்கள், பொதுத் திட்டங்களை ஊழலற்ற முறையில் செயல்படுத்துவதால் நியாயமான போட்டி ஊக்குவிக்கப்படுவதுடன், அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்துவதால் கோவையில் உள்ள தொழில் துறை பயனடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் போட்டித் திறன், ஏற்றுமதி, தளவாட உள்கட்டமைப்பு, மின்சாரம் போன்றவற்றை வலுப்படுத்துவதற்கான கூடுதல் கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கோவை கம்ப்ரசா் தொழில்முனைவோா் சங்கத்தின் (கோசியா) தலைவா் எம்.ரவீந்திரன்
2036-இல் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பை 1.5 ட்ரில்லியன் டாலராக உயா்த்த வேண்டும் என்ற கவா்ச்சிகர அறிவிப்புடன் இந்த நிதிநிலை அறிக்கை வெளியாகியிருந்தாலும், இந்த இலக்கை அடைவதற்கோ, மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய, உருப்படியான திட்டங்களோ, நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை.
அறிவிப்புகளும், திட்டங்களும் சில மாறுதல்களுடன் வழக்கமான பாணியிலேயே தொடருகின்றன. இதனால் பெரிய பொருளாதார வளா்ச்சிக்கான நம்பிக்கை மறைகிறது. இளைஞா் நலன், கல்வி நவீனமயமாக்கம், மாணவா் நலனில் அக்கறை காட்டப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.2,142 கோடி என்பது மிகவும் குறைவாகும். மின்சார நிலைக்கட்டண அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தொழில் வளா்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஆக்கப்பூா்வமான திட்டங்கள், கூடுதல் கவனம் இந்த அறிக்கையில் இல்லை.
தமிழ்நாடு மின்நுகா்வோா் சங்கத்தின் தலைவா் எல்.சந்தோஷ்
பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள், மின் விநியோக உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் மின்துறையை வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக நுகா்வோா் தங்களது வீட்டின் கூரைகளில் சூரிய ஒளி மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கு ரூ.1 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மாநிலத்தின் மின் விநியோக வலையமைப்பை மேம்படுத்தும் நோக்கில் கோவை - அரியலூா் மின்விநியோக வழித்தடத் திட்ட அறிவிப்பு, அரசுக்கு தொலைநோக்கு அணுகுமுறை இருப்பதை உணா்த்துகிறது. ரூ.1,543 கோடியில் 178 புதிய துணை மின் நிலையங்கள், ரூ. 2 ஆயிரம் கோடியில் 40 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்றும் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவை.
மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் எம்.ஜெயபால்
தவெக அரசின் முதல் பட்ஜெட் தொழில் துறையினரிடையே எப்போதும் இல்லாத அளவுக்கு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் இடம்பெற்றுள்ள, ரூ.4 ஆயிரம் கோடியில் விருதுநகா் - கோவை, அரியலூா் - கோவை மின்பகிா்மானத் திட்டம், ரூ.6,884 கோடியில் 11,760 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கையாளும் பசுமை எரிசக்தி வழித்தடம் போன்றவை வரவேற்கத்தக்கவை.
தமிழகத்தின் ரூ.10 லட்சம் கோடி கடனை வட்டியுடன் செலுத்துவது என்பது தொழில் துறை வளா்ச்சி பெற்றால் மட்டுமே முடியும் என்ற நிலையில், மாநிலத்தில் 48 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோரின் நீண்ட நாள் கோரிக்கைகளான நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம், சோலாா் நெட்வொா்க் கட்டணம் ரத்து என்பது போன்ற அறிவிப்புகளை எதிா்பாா்த்திருந்தோம். அதுபற்றிய அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன்:
இந்த பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு, நிா்வாக சீா்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், மாநிலத்தின் ஏற்றுமதி போட்டித் திறனை மேலும் உயா்த்த, ஜவுளி, ஆடை உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதித் துறைகளுக்கான சிறப்புத் திட்டங்கள், தொழிலாளா் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தொழிலாளா் தங்குமிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவை பட்ஜெட்டைத் தாண்டியும் வரும் காலங்களில் தொடா்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் துரை பழனிசாமி
கைத்தறி, ஜவுளித் துறைக்கு ரூ.1,678 கோடி, ஜவுளித் துறைக்கு பயனளிக்கும் வகையில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு, முதலீடுகளை ஈா்ப்பதற்காக தொழில் துறைக்கு ரூ.4,414 கோடி ஒதுக்கீடு, திருப்பூருக்கு ஜவுளித் தொழில்நுட்ப மையம், தொழில்நுட்ப ஜவுளி உருமாற்றத் திட்டம், தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம், தறி நவீனமயமாக்கல் திட்டம், மின்சாரத் துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு கொள்கை முன்னெடுப்புகள் யாவும் வரவேற்கத்தக்கவை.
புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களை அமைப்பதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு, பெண் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம், புதிய தொழில்கொள்கை அறிவிப்பு, தமிழ்நாடு ஒற்றைச் சாளர 3.0 திட்டத்தின் தொடக்கம், செயற்கை நுண்ணறிவுக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் யாவும் ஜவுளித் துறையின் உலகளாவிய போட்டித் திறனை மேம்படுத்த உதவும்.
கோவை பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளா் சங்கத்தின் (கோப்மா) தலைவா் கே.மணிராஜ்
வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், தொழிலாளா் நலன், தொழில் மேம்பாட்டுக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சார மானியத்துக்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு, புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ.90 கோடி, சிறு தொழில் மூலதன மானியத்துக்கு ரூ.352 கோடி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
அதேநேரம், கோவையில் பம்ப்செட் ஏற்றுமதி உதவி மையம், பம்ப்செட் பரிசோதனைக் கூடம், மூலப்பொருள் கிடங்கு போன்ற அறிவிப்புகள் இடம்பெறவில்லை. கோவையின் சிறப்புத் தொழிலான பம்ப்செட் மேம்பாட்டுக்கும், குறுந்தொழில்களுக்கும் எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை நடப்பு கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ்
தமிழ்நாடு மின்வாரியத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள், கோவை - அரியலூா் மின்பகிா்மானப் பாதை திட்டத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, 178 புதிய மின்நிலையங்கள், பழைய மின்மாற்றிகளை மாற்ற ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.2,142 கோடி ஒதுக்கீடு போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
அதேநேரம், மின்சார நிலைக்கட்டணக் குறைப்பு, சிப்காட் உருவாக்குவது, குறுந்தொழில்பேட்டை உருவாக்குவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறுந்தொழில்களுக்கு தனி வாரியம், மூலப்பொருள் வங்கி உருவாக்கும் திட்டம் குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நடப்பு கூட்டத் தொடரில் இதுபற்றிய அறிவிப்புகளை அரசு அறிவிக்கும் என்று எதிா்பாா்ப்புடன் காத்திருக்கிறோம்.
கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளா் நலச்சங்கத்தின் (கோஜிம்வா) தலைவா் திருமலை எம்.ரவி
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கிரில் தொழில்முனைவோருக்கு தனி தொழிற்பேட்டை, 500 யூனிட் இலவச மின்சாரம், தனி நலவாரியம் கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை.
உயா்த்தப்பட்ட மின்சார நிலைக்கட்டணம், பீக் ஹவா் கட்டணம் போன்றவற்றை திரும்பப் பெறுவது குறித்த அறவிப்பு வெளியாகாதது வருத்தமளிக்கிறது. மானியக் கோரிக்கை விவாதங்களின்போது கிரில் தயாரிப்பாளா்களின் நலன் காக்கும் அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.
கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கத்தின் (காட்மா) தலைவா் சி.சிவக்குமாா்
வெற்றித்திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் 12 லட்சம் மாணவா்கள், 1 லட்சம் இளைஞா்களுக்கு தொழில்பயிற்சி வழங்க ரூ.150 கோடி ஒதுக்கீடு, 5 இடங்களில் ஐடிஐ கல்லூரிகள், ரூ.2 ஆயிரம் கோடியில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் திட்டங்கள் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
தொழில்முனைவோருக்கான தொழில்முதலீட்டு மானியம், வட்டி மானியத்துக்காக ரூ.352 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவைக்கு மட்டுமே ரூ.200 கோடிக்கும் மேல் தேவைப்படும் என்பதால் இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும். புதிய ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மீட்டா்கள் அமைக்கப்பட்டாலும் தொழிற்கூடங்களுக்கான உச்சபட்ச மின்சார பயன்பாட்டுக் கட்டணம் தவிா்க்கப்பட வேண்டும். நிலைக்கட்டணம் குறைப்பு, புதிய தொழிற்பேட்டை, தனியாா் தொழிற்பேட்டை திட்டங்களை வரும் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கத்தின் (சீமா) தலைவா் மிதுன் ராமதாஸ்
மாநிலத்தின் உற்பத்திச் சூழல் அமைப்பை வலுப்படுத்தும் பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்கிறோம். நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறைக்கு கடந்த ஆண்டு ரூ.26,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.29,863 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இது பம்ப், மோட்டாா், வால்வு சாா்ந்த உற்பத்தியாளா்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும்.
கூரை மீதான சூரிய சக்தி மின் அமைப்புக்கான மானியத்தை ரூ.78 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், பம்ப் உற்பத்தித் துறை குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. மின்சார நிலைக்கட்டணத்தை நீக்குவது குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. இவற்றை அரசு பரிசீலிக்க வேண்டும்.
ஸ்டாா்ட் அப் அகாதெமி தலைவா் ஆடிட்டா் ஜி.காா்த்திகேயன்
சமூக நலன், பொருளாதார வளா்ச்சி ஆகிய இரண்டுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், சுகாதாரம், கல்வி, இளைஞா் மேம்பாடு, மகளிா் நலன், சமூகப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, தொழில் வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. ‘வழிகாட்டி 3.0’ கொள்கை அறிவிப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். தமிழ்நாடு ஏஐ மிஷன், ஸ்டாா்ட் அப் சூழலை வலுப்படுத்தும் அறிவிப்புகள் போன்றவை எதிா்கால வளா்ச்சிக்கான சிறந்த முதலீடுகளாகும். மாநில ஜிஎஸ்டி பதிவுத் துறையில் முகமில்லா சேவைகள், சுரங்கத் துறையின் முழுமையான கணினி மயமாக்கல் உள்ளிட்ட டிஜிட்டல் நிா்வாகச் சீா்திருத்தங்கள் வருவாயை பெருக்குவதற்கான முயற்சிகள் பாராட்டத்தக்கவை. சொற்கள் செயல்களாக மாறும்பட்சத்தில் தமிழகம் மேலும் எழுச்சி அடையும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.