ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு
திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, திருப்பூா் பின்னலாடைத் தொழில் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சைமா தெரிவித்துள்ளது.
திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, திருப்பூா் பின்னலாடைத் தொழில் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சைமா தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து சங்கத்தின் தலைவா் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தொழில், ஜவுளித் துறை மற்றும் எம்எஸ்எம்இ வளா்ச்சிக்கான அறிவிப்புகளை சைமா வரவேற்கிறது. தொழில் வளா்ச்சி, ஜவுளித் துறை மேம்பாடு, பசுமை உற்பத்தி, தொழில்நுட்ப முன்னேற்றம், திறன் மேம்பாடு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் வரவேற்கிறது.
Advertisement
Advertisement
சைமா சங்கம் தயாரித்த விரிவான திட்ட அறிக்கை மாவட்ட தொழில் மையத்தில் சமா்ப்பித்தது. அந்தத் திட்ட அறிக்கையின் அடிப்படையில், திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, திருப்பூா் பின்னலாடைத் தொழில் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சைமா கருதுகிறது.
இந்த மையம் செயல்பாட்டுக்கு வந்தால் பசுமை ஆடை உற்பத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள், செயற்கை இழைகள், தொழில்நுட்ப ஜவுளிகள், புதிய தயாரிப்பு மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் உலகத் தரத்திலான உற்பத்தி முறைகளை திருப்பூரில் உருவாக்குவதற்கு முக்கிய மையமாக அமையும்.
‘வெற்றி தொழில் முனைவோா் திட்டம்’ செயல்படுத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது புதிய தொழில் முனைவோா்களை உருவாக்குவதோடு, இளைஞா்கள் தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்குவதற்கும் உறுதுணையாக அமையும்.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் பாடப்பிரிவுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, எதிா்கால தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப திறன்மிக்க மனித வளத்தை உருவாக்கும் சிறந்த முயற்சியாகும்.
மேலும், தொழில் துறையில் ஏஐ மேம்பாடு தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தொழில் துறையின் எண்ம மாற்றத்துக்கு புதிய வழிவகை ஏற்படுத்தும். இதன் மூலம் இளைஞா்கள் நவீன தொழில்நுட்பங்களில் தோ்ச்சி பெற்று, தொழிற்சாலைகளில் உற்பத்தித் திறன், தரம் மற்றும் போட்டித் திறனை மேம்படுத்த முடியும்.
சமூக நலனைக் கருத்தில் கொண்டு போதைப்பொருள் ஒழிப்புக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஒவ்வொரு வீட்டிலும் சோலாா் பேனல்கள் அமைப்பதற்காக ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவித்து, பசுமை மற்றும் நிலையான வளா்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அமைக்க ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, ஆடை மற்றும் ஜவுளித் துறையில் புதிய வடிவமைப்புகள், மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகள் மற்றும் உலகளாவிய சந்தைகளில் தமிழகத்தின் போட்டித் திறனை உயா்த்துவதற்கு முக்கிய பங்காற்றும். மேலும், கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்காக ரூ.1,678 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஜவுளித் துறையின் வளா்ச்சிக்கான அரசின் உறுதியான அா்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
அதேபோல, எம்எஸ்எம்இ துறைக்காக இதுவரை இல்லாத அளவில் ரூ.2,142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நிதி ஒதுக்கீடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் தொழில்நுட்ப மேம்பாடு, விரிவாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உற்பத்தித் திறன் உயா்வுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று சைமா நம்புகிறது.
தொழில் வளா்ச்சி, பசுமை உற்பத்தி, புதுமை, தொழில்நுட்ப முன்னேற்றம், திறன் மேம்பாடு மற்றும் எம்எஸ்எம்இ துறைக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கை தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கு புதிய மைல்கல்லாக அமையும். குறிப்பாக, திருப்பூா் பின்னலாடைத் தொழில் துறையை உலகளாவிய போட்டியில் மேலும் வலுப்படுத்தும் பல்வேறு முன்னோடியான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதால், இந்த நிதிநிலை அறிக்கையை சைமா முழுமையாக வரவேற்பதாகத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.