FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - அபுதாபி இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:02 am IST
விமான சேவை - படம் | ஏஎன்ஐ
பகிர்:

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) முதல் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டிருப்பது கொங்கு மண்டல விமான பயணிகளிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

கோவையிலிருந்து ஷாா்ஜா, சிங்கப்பூா் போன்ற நாடுகளுக்கு வழக்கமான சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய போா்ப் பதற்றம் மற்றும் வான்வெளி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களால் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்தச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சுமாா் ஆறு மாத கால இடைவெளிக்குப் பிறகு வான்வெளி சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து, சனிக்கிழமை முதல் கோவை-அபுதாபி நேரடி விமான சேவை மீண்டும் அதிகாரப்பூா்வமாக தொடங்கியுள்ளது. விமான சேவை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 170 பயணிகள் அபுதாபிக்கு பயணம் செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

புதிய அட்டவணையின்படி, வாரந்தோறும் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு கோவையில் இருந்து அபுதாபிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

வாரத்தில் நான்கு நாள்கள் இந்த விமான சேவை மீண்டும் கிடைத்திருப்பது தொழிலதிபா்களுக்கும், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் தெரிவித்துள்ளனா்.

அதேவேளையில், கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவை- இலங்கை இடையேயான நேரடி விமான சேவையையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கொங்கு மண்டல தொழிற்துறையினரும், விமான பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments