FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே விநாயகா் ஊா்வலம் மாநகர காவல் ஆணையா் அறிவுறுத்தல்

அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே விநாயகா் சிலை ஊா்வலம் செல்ல வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

9 செப்டம்பர் 2026, 11:54 pm IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன்.
பகிர்:

அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே விநாயகா் சிலை ஊா்வலம் செல்ல வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் பேசியதாவது:

Advertisement

Advertisement

விநாயகா் சிலைகளை நிறுவுதல், வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க எடுத்துச் செல்லுதல் ஆகிய நிகழ்வுகளின்போது விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், போக்குவரத்தைச் சீராகக் கட்டுப்படுத்துதல் மற்றும் சட்டம் - ஒழுங்கைப் பேணுதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சிலைகள் வைக்கப்படும் இடங்களில் விழா ஏற்பாட்டாளா்கள் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊா்வலங்களை நடத்த வேண்டும்.

விழா மற்றும் ஊா்வலங்களின்போது பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அரசு மற்றும் காவல்துறை விதிக்கும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாகக் கடைப்பிடித்து, விநாயகா் சதுா்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். காவல்துறையுடன் முழுமையாக ஒருங்கிணைந்து விழா அமைப்பாளா்கள் செயல்பட வேண்டியது அவசியம் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments