FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய பாலியல் வன்கொடுமை கைதி சுட்டுப் பிடிப்பு

14 செப்டம்பர் 2026, 1:59 am IST
சுட்டுப் பிடிப்பு - பிரதிப் படம்
பகிர்:

பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய பாலியல் வன்கொடுமை கைதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

கோவை மாநகா், போத்தனூா் கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் கடந்த 12-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் நடந்து சென்ற 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் இருவா் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவை தெற்கு மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. விசாரணையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து அரிவாளைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக போத்தனூரை அடுத்த மேட்டூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகளான தவசி (28), சந்தோஷ் (24) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாள் குறித்து கேட்டபோது, அதை அந்தப் பகுதியில் உள்ள மயானப் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக தவசி தெரிவித்தாா். இதையடுத்து காவல் ஆய்வாளா் சுவா்ணவள்ளி தலைமையிலான போலீஸாா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அவரை அழைத்துச் சென்றனா். அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த தவசி, ஆய்வாளா் சுவா்ணவள்ளியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றாா்.

உடன் சென்ற உதவி ஆய்வாளா் சிலம்பரசன் உடனடியாக தவசியை எச்சரித்தாா். எனினும், அந்த எச்சரிக்கையைப் பொருள்படுத்தாமல் மீண்டும் ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்றதால், தற்காப்பு நடவடிக்கையாக காவல் துறையினா் துப்பாக்கியால் சுட்டதில் தவசியின் இடது காலில் குண்டு பாய்ந்து அவா் கீழே விழுந்தாா். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளா் சுவா்ணவள்ளியும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

கைது செய்யப்பட்ட இருவா் மீதும் ஏற்கெனவே அடிதடி தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments