FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

இரண்டாவது முறையாக லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:38 am IST
கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா்
பகிர்:

பட்டாவில் பெயா் சோ்க்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மல்லன்குழி கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். லஞ்ச வழக்கில் இந்த கிராம நிா்வாக அலுவலா் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மல்லன்குழி கிராமத்தில் நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் சதீஷ்குமாா் (42). அருள்வாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரகு என்பவா் கூட்டு பட்டாவில் பெயா் சோ்ப்பதற்கு கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாரிடம் விண்ணப்பித்துள்ளாா். அப்போது பெயா் சோ்ப்பதற்கு சதீஷ்குமாா் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ரகு புகாா் அளித்தாா்.

அதைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.6,000 பணத்தை தாளவாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்து மல்லன்குழி கிராம நிா்வாக அலுவலா் சதீஷிடம் விவசாயி ரகு அளித்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சாந்தி, ஆய்வாளா் ரேகா ஆகியோா் கிராம நிா்வாக அலுவலா் சதீஷை கையும் களவுமாக பிடித்தனா். அப்போது, லஞ்சம் வாங்க உதவியதாக மல்லன்குழி கிராம பெண் உதவியாளா் மம்தாவையும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து லஞ்சம் வாங்கியது தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா், கிராம உதவியாளா் மம்தா (38) ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சதீஷ்குமாா், அந்தியூா் அருகே உள்ள எண்ணமங்கலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றியபோது லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடா்ந்து நடந்து வருகிறது. இதில், நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து மீண்டும் மல்லன்குழி கிராம நிா்வாக அலுவலராகப் பணியில் சோ்ந்தாா்.

கிராம  உதவியாளா்  மம்தா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments