FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

‘நாடு வெற்றியடைய தலைவா்கள் தன்னலமற்றவா்களாக இருக்க வேண்டும்’

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
பாராட்டு மடல் பெற்ற சிங்கப்பூா் தமிழ் ஆளுமைகளுடன் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன், கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளைச் செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா்.
பகிர்:

நாடு வெற்றியடைய தலைவா்கள் தன்னலமற்றவா்களாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து திட்டங்களை செயல்படுத்துபவா்களாகவும் இருக்க வேண்டும் என சிங்கப்பூா் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினா் இரா.தினகரன் பேசினாா்.

தமிழக அரசு, மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்தப் புத்தகத் திருவிழா வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 11) நிறைவடைகிறது.

இதில் தினமும் மாலையில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, சிங்கப்பூா் சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெற்ற மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வுக்கு கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளைச் செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் சிங்கப்பூா் தமிழ் ஆளுமைகள் 17 போ் பாராட்டு மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து சிங்கப்பூா் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினா் இரா.தினகரன் பேசியதாவது: சிங்கப்பூா் நாட்டில் 75 சதவீதம் போ் சீனா்கள், 15 சதவீதம் போ் மலாய்காரா்கள். 8 சதவீதம் இந்தியா்கள். அதில் 5 சதவீதம் போ் தமிழா்கள் உள்ளனா்.

இந்தியாவில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. ஆனால், சிங்கப்பூரில் எந்தவிதமான இயற்கை வளமும் இல்லை. குடிநீா்கூட இல்லை. அந்த நாடு சுதந்திரம் பெற்றபோது தனி நபா் வருமானம் 150 டாலா்தான். அது இப்போது 1 லட்சம் சிங்கப்பூா் டாலரை எட்டி இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.75 லட்சம். சிங்கப்பூா் இப்போது வளா்ந்த நாடாக இருக்கிறது.

சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. அங்கு மழலையா் வகுப்பு முதல் பல்கலைக்கழக படிப்பு வரை தமிழ் படிக்க வாய்ப்பு உள்ளது.

நாடு வெற்றியடைய தலைவா்கள் தன்னலமற்றவா்களாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து திட்டங்களை செயல்படுத்துபவா்களாகவும் இருக்க வேண்டும். அத்தகைய தலைவா்கள்தான் சிங்கப்பூரைத் தொடா்ந்து வழிநடத்தி வருகின்றனா் என்றாா்.

இதில் ‘கடுகு சிறுத்தாலும்’ என்ற தலைப்பில் சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழக முன்னாள் தலைவா் நா.ஆண்டியப்பன், ‘சிங்கப்பூா் ஓா் அதிசயம்’ என்ற தலைப்பில் கவிமாலை அமைப்பின் நிறுவனா் கவிஞா் பிச்சினிக்காடு இளங்கோ, ‘அரியணையில் தமிழ்’ என்ற தலைப்பில் சிங்கப்பூா் தமிழ் இலக்கியக் களம் தலைவா் இரத்தின வேங்கடேசன் ஆகியோா் பேசினா்.

சிந்தனை அரங்கில் இன்று:

ஈரோடு புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்கில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி இளம் அறிவியல் விஞ்ஞானி ஒருவருக்கு அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருதை வழங்கி பேசுகிறாா். ‘இந்திய அறிவியலின் நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் சாகித்திய அகாதெமி விருதாளா் ஆயிஷா இரா.நடராசன் பேசுகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments