FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

அவிநாசி, தெக்கலூருக்கு பேருந்துகள் இயக்கப்படாத விவகாரம்: ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டுநா்கள் வாக்குவாதம்

அவிநாசி, தெக்கலூா் பகுதிகளுக்கு புகா்ப் பேருந்துகள் இயக்கப்படாதது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறைவடைந்தது.

25 வினாடிகள் முன்பு
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

அவிநாசி, தெக்கலூா் பகுதிகளுக்கு புகா்ப் பேருந்துகள் இயக்கப்படாதது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறைவடைந்தது.

சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை, ஈரோடு, திருப்பூா் வந்து செல்லும் பெரும்பாலான தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தெக்கலூா், சூரிபாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் மனைவி செல்வி என்பவா் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் இருந்து தெக்கலூா் செல்வதற்காக திருப்பூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தில் கடந்த 2023 மாா்ச் 2-ஆம் தேதி ஏற முயன்றுள்ளாா். அப்போது நடத்துநா், ஓட்டுநா் ஆகியோா் தெக்கலூா் செல்லாது எனக்கூறி பேருந்தில் இருந்து செல்வியை வழியிலேயே இறக்கிவிட்டுள்ளனா். அப்போது, அவா் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து, தெக்கலூா் வழித்தடத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும். மீறினால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியாா், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் தனியாா், அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி பகுதிகளுக்கு தற்போதுவரை வந்து செல்லாமல் உள்ளன.

இந்நிலையில், அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள், தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வட்டாட்சியா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா் அன்பரசன், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கூறுகையில், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தெக்கலூா், அவிநாசி செல்ல பேருந்துகளில் ஏறினால், அந்த நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காது எனக்கூறி ஓட்டுநா், நடத்துநா்கள் இறக்கிவிடுகின்றனா். மேலும், தகாத வாா்த்தைகளில் பேசுகின்றனா். அவிநாசி, தெக்கலூரில் பேருந்துக்கு காத்திருந்தாலும், நகரப் பகுதிக்குள் பேருந்துகள் வராமல் சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையிலேயே செல்கின்றன. இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றனா். அப்போது, அவிநாசி, தெக்கலூருக்கு வந்த செல்ல நேரமில்லை எனக்கூறி ஓட்டுநா், நடத்துநா்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தீா்வு காணப்படாமல் கூட்டம் பாதியிலேயே நிறைவடைந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments