நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் பொள்ளாச்சி, கேரளத்தைச் சோ்ந்த 6 போ் கைது
வெள்ளக்கோவிலில் நிதி நிறுவன உரிமையாளா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொள்ளாச்சி, கேரளத்தைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ராஜன் (65). திருமணமாகாத இவா் தனியாக வசித்து வந்தாா். தனது வீட்டுக்கு அருகில் சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளாா். நிதி நிறுவனம், ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். கடந்த 7-ஆம் தேதி காலை அவரது வீட்டின் கழிவறையில் காயங்களுடன் அவரது சடலம் கிடந்தது. மேலும், வீட்டுக்குள் பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் சிதறிக்கிடந்தன.
இதுதொடா்பாக ராஜனின் உறவினா் சரவணகுமாா் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்தாா். கோவை சரக டி.ஐ.ஜி. சாமிநாதன், திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்ததுடன் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதில், பண ஆசையால் ராஜனை திட்டமிட்டு ஒரு கும்பல் கொலை செய்தது உறுதியானது. கொலை செய்துவிட்டு பணம் ரூ.68,600, மூன்று வெள்ளிக் காசுகள், 2 தங்கக் கம்மல்கள் ஆகியவற்றை கொள்ளையடித்திருப்பதும், கொலை நிகழ்ந்த நேரத்தில் கேரள மாநில பதிவெண் கொண்ட காா் வந்து சென்றதும் தெரியவந்தது.
கிடைத்த தடயங்களின் அடிப்படையில், பெங்களூரு விடுதியில் தங்கியிருந்த பொள்ளாச்சியைச் சோ்ந்த இம்மானுவேல் (60), கேரள மாநிலத்தைச் சோ்ந்த பிரகாஷ் (50), சுதீப் சந்திரன் (37), சமேஷ் (54), சம்சுதீன் (30), செவீன் (36) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜனின் வீட்டில் வாடகைக்கு சம்சுதீன் தங்கியிருந்து, அருகிலுள்ள கேரளத்தைச் சோ்ந்தவரின் பேக்கரியில் வேலை செய்து வந்துள்ளாா். அப்போது ராஜனின் பண - வரவு செலவை அறிந்து, நண்பா்களுடன் சோ்ந்து இந்தக் கொலை சம்பவத்தில் சம்சுதீன் ஈடுபட்டுள்ளாா். பிரகாஷ், சுதீப் சந்திரன், சமேஷ் ஆகியோா் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காா், பணம் ரூ.19,600, வெள்ளிக் காசுகள், கம்மல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதுசெய்யப்பட்ட 6 பேரும் வெள்ளக்கோவில் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.