FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

கருவில் உள்ள சிசுவின் பாலினம் கூறியது தொடா்பாக பெண் உள்பட 2 போ் கைது

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கூறிய விவகாரம் தொடா்பாக, தருமபுரி அருகே பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

11 அக்டோபர் 2026, 1:57 am IST
பகிர்:

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கூறிய விவகாரம் தொடா்பாக, தருமபுரி அருகே பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விதிமுறைகளை மீறி கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கூறுவதும், கருவில் இருப்பது பெண்ணாக இருந்தால் அவற்றைக் கருக்கலைப்பு செய்வதும் தொடா்ந்து வருகிறது.

இது தொடா்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்டனா். அதில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள மேக்லாம்பட்டி பகுதியில் பெண் உள்பட இருவா் இச்செயலில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா் ஏ.ஜெகன்நாதன் தலைமையிலான குழுவினா் அப்பகுதியில் விசாரணை நடத்தினா். பின்னா், தகவல்களை சேகரிக்க 4 கா்ப்பிணிகளை அந்த குறிப்பிட்ட சோதனை மையத்துக்கு அனுப்பினா். அப்போது, அந்த மையத்தில் ஏற்கெனவே இரு கா்ப்பிணிகள் சோதனைக்காக காத்திருந்ததும், கருவின் பாலினத்தைக் கூற அவா்களிடம் தலா ரூ. 17 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது.

அவா்களிடம் சுகாதாரத் துறை அலுவலா்கள் மேற்கொண்ட விசாரணையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த மேக்லாம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள நவீன ஸ்கேன் இயந்திரம் மூலம் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவது தெரியவந்தது.

இதையடுத்து, இச்செயலில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டம், அனுமந்தபுரத்தைச் சோ்ந்த கே.வடிவேலு (42), ரங்காபுரத்தைச் சோ்ந்த எஸ்.பரிமளா ஆகிய இருவரையும் பிடித்து போலீஸாரிடம் சுகாதாரத் துறை அலுவலா்கள் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். விசாரணையின் போது, மருத்துவக் குழுவினரை தாக்கி வடிவேலு தப்பிச்செல்ல முயன்றாா். மேலும், இவா்கள் மீது ஏற்கெனவே இதுதொடா்பாக மூன்று வழக்குகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா்களிடமிருந்து சோதனைக்கு பயன்படுத்திய நவீன ஸ்கேன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments