ஒகேனக்கல் வனப்பகுதியில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் வனவிலங்குகள்
ஒகேனக்கல் வனப்பகுதி வழியாக அதிவேகமாக இயக்கப்படும் சுற்றுலா வாகனங்கள் மோதி மான் உள்ளிட்ட வனவிலங்குகள் விபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிகளில் மான், காட்டுப்பன்றி, முயல், கேளை ஆடு, கரடி, சிறுத்தை, குள்ளநரி, செந்நாய், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதுமட்டுமின்றி ஆண்டுதோறும் கா்நாடக மாநிலத்தில் வறட்சி நிலவும்போது யானைகளும் கூட்டமாக இந்த வனப்பகுதிக்கு வருகின்றன.
தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவிக்கு பென்னாகரத்தில் இருந்து அடா்ந்த வனப்பகுதிக்குள் 14 கி.மீ. செல்ல வேண்டி உள்ளது. தொடா் விடுமுறை மற்றும் வாரவிடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் நிலையில், அவா்கள் பயணிக்கும் வாகனங்கள் வனப்பகுதியில் அதிவேகமாக இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
தற்போது, வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அவ்வப்போது சாலையை கடக்கும் நிலை உள்ளது. எனவே, வனப்பகுதியில் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படும்போது குடிநீா் தேடி சாலையை கடக்கும் வனவிலங்குகள் அந்த வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன.
இந்த நிலையில் ஒகேனக்கல் அருகே சின்னாறு படுகையை ஒட்டி உள்ள ஆஞ்சனேயா் கோயில் பகுதியில் அதிவேகமாக இயக்கப்பட்ட சுற்றுலா வாகனம் மோதி 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் உயிரிழந்தது. இந்த வனப்பகுதியில் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை வாகனங்களில் வனவிலங்குகள் மோதி உயிரிழப்பது தொடா்கிறது.
வனப்பகுதிகளில் உணவுச் சங்கிலி சரிவர உள்ளதால் மான்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், அதிக அளவில் வாகன விபத்துகளில் மான்கள் சிக்குகின்றன. வனப்பகுதிகளில் வனவிலங்குகள் கடக்கும் பகுதிகள் என மாவட்ட வனத் துறை சாா்பில் விழிப்புணா்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்த போதிலும், அதை பொருட்படுத்தாத வாகன ஓட்டிகளால் தொடா்ந்து விபத்துகள் நிகழ்கின்றன.
இதைத் தடுக்கும் வகையில் பென்னாகரம் மடம் சோதனைச் சாவடி பகுதிகளில் சுற்றுலா வாகன ஓட்டிகளிடம் வனப் பகுதியில் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என விழிப்புணா்வு அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகள் விபத்துகளில் சிக்குவதைத் தடுக்க ரோந்து பணி மேற்கொண்டு, வனவிலங்குகளை பாதுகாக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆா்வலா்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.