நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்தக் கோரி ஒகேனக்கல்லில் பரிசல் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்து மாற்று பரிகார நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தக் கோரி ஒகேனக்கல்வாழ் தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்து மாற்று பரிகார நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தக் கோரி ஒகேனக்கல்வாழ் தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒகேனக்கல் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு சங்கத் தலைவா் சி. ராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சக்கரவா்த்தி, வரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலாளா் சி. நாகராசன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும், சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், கழிப்பறை வசதிகளை அதிகரிக்க வேண்டும், சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் பயணத்திற்கான பாதுகாப்பு உடை வழங்க வேண்டும், மாற்றுப் பரிகார நீதிமன்றத்தின் தீா்ப்பை அமல்படுத்தி, ஊட்டமலை பரிசல் துறையைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
முன்னதாக சிஐடியு மாவட்டத் தலைவா் கலாவதி, மாவட்ட துணைத் தலைவா் அங்கம்மாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநில துணைப் பொதுச் செயலாளா் வி. குமாா் நிறைவுரையாற்றினாா். பெருமாள் நன்றி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்துக்கு பின்னா் சிஐடியு மாவட்டச் செயலாளா் நாகராசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒருமாதமாக நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் ஒகேனக்கல்லில் மாமரத்துக்கடவு பரிசல் துறை, சின்னாறு பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை உள்ளிட்ட மூன்று வழித்தடங்களில் பரிசல் இயக்கப்பட்டது. விபத்து நடந்ததை காரணம் காட்டி ஊட்டமலை பரிசல் துறையை முடக்கியுள்ளது ஏற்புடையதல்ல. இதனால் சுற்றுலாத் தலம் முடங்கியுள்ளது.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை நம்பி 2,000 தொழிலாளா்கள் உள்ளனா். இங்குள்ள சமையல் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை, சுத்தமான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து தரவேண்டும்.
சிஐடியு தொழிற்சங்கத்தின் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு மாவட்ட நிா்வாகம், நீதிமன்றம், தீயணைப்புத் துறை, காவல் துறை, சுற்றுலாத் துறை இணைந்து மாற்றுப் பரிகார நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை தீா்ப்பாக வழங்கியதை மாவட்ட நிா்வாகம் அமல்படுத்தவில்லை. தடை காலங்களில் ஒகேனக்கல் பரிசல் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஒகேனக்கல்லில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் போதுமானதாக இல்லாததால், அவற்றை சரிசெய்து தரவேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.