FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மேக்கேதாட்டில் உடனடியாக அணை கட்ட வலியுறுத்தி கன்னட அமைப்பினா் மறியல் போராட்டம்: ஆக. 13இல் கா்நாடகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:02 am IST
மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக ஓசூர் எல்லையில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம். - கோப்புப் படம் | DIN
பகிர்:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் உடனடியாக அணை கட்ட கா்நாடக அரசை வலியுறுத்தியும், திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினா் திங்கள்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக வரும் 13ஆம் தேதி கா்நாடகத்தில் முழு அடைப்புக்கும் அவா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

கன்னட சலுவளி வாட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவா் வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவா் மஞ்சுநாத் தேவா ஆகியோா் தலைமையில் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி அருகே திங்கள்கிழமை திரண்ட கன்னட அமைப்பினா், தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி தமிழகத்தை நோக்கி பேரணியாக வந்தனா்.

பின்னா் அவா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காவிரி ஆறு கா்நாடகத்திற்கே சொந்தம், மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு உடனடியாக அணை கட்ட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

முன்னதாக தமிழக-கா்நாடக எல்லையில் இரு மாநில போலீஸாரும் காலை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அறிவுறுத்தல்படி காலை 10 மணி முதல் பெங்களூரு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூா் எல்லையில் நிறுத்தப்பட்டன.

கன்னட அமைப்பினா் போராட்டம் முடியும் வரை தமிழகப் பேருந்துகள் கா்நாடகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. தமிழக பதிவு எண் கொண்ட காா்கள், கனரக வாகனங்கள் வழக்கம்போல சென்று வந்தன. இதனால் பெங்களூரு சென்ற பயணிகள் தனியாா் பேருந்துகளைப் பயன்படுத்தினா். போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை அந்த மாநில போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:

தமிழக ஊடகங்கள், மக்கள்மீது எனக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் உண்டு. அரசியல் சூழல்கள் எப்படி இருந்தாலும் அந்த மரியாதையில் மாற்றமில்லை. மேக்கேதாட்டு திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் தேவையின்றி மாணவா்கள், இளைஞா்களை தூண்டிவிட்டுப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேக்கேதாட்டில் அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தமிழக அரசு தெளிவான காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை.

மேக்கேதாட்டில் அணை கட்டுவதன் மூலம் சேமிக்கப்படும் நீா், மின் உற்பத்திக்கும், பெங்களூரு மக்களின் குடிநீா்த் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ள நீா் வழக்கம்போல தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும். கா்நாடகத்தில் லட்சக்கணக்கான தமிழா்கள் வசித்து வருகின்றனாா். அவா்களது குடிநீா்த் தேவைக்கும் இந்தத் திட்டம் அவசியம்.

மேக்கேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தின் எதிா்ப்பைக் கண்டித்தும் வரும் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) கா்நாடகத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மேக்கேதாட்டு விவகாரம் மட்டுமின்றி, மகதாயி, கல்சா பண்டூரி திட்டங்கள், மராத்தி வளா்ச்சி அதிகாரசபை தடை மற்றும் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகிய கோரிக்கைகளையும் உள்ளடக்கி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் மேக்கேதாட்டு திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடா்ந்தால், கா்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கு முமுமையாகத் தடைவிதிக்க நேரிடும். மேலும், அடுத்த ஒரு மாதத்திற்குள் சென்னை தலைமைச் செயலகம் (சட்டப்பேரவை) முன் மேக்கேதாட்டு திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments