"அரசுத் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்'
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என மின்னாம்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ஆட்சியர் மு. ஆசியா மரியம் அறிவுறுத்தினார்.
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என மின்னாம்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ஆட்சியர் மு. ஆசியா மரியம் அறிவுறுத்தினார்.
மக்கள்தொடர்பு திட்ட முகாம் நாமக்கல் அருகே மின்னாம்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ. 22.57 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியது:
இந்த முகாமில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டு அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தோடு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும், குப்பைகள், தண்ணீர் தேங்காமல் பாதுகாத்தல், குடிதண்ணீர் பாத்திரங்களை முறையாக மூடி வைத்தல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் தற்போது டெங்கு தாக்கம் ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் தொடர்ந்து வீடு, சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றார்.
அதைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கி அம்மனுக்கள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.
முகாமில் வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் திட்ட விளக்கவுரையாற்றினர். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் நாமக்கல் சார் ஆட்சியர் சு. கிராந்தி குமார் பதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் துரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கி.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரா. சுப்ரமணியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், சமூகநல அலுவலர் ரா.அன்பு, நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் சி. செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.